இரத்தினையா – சுகிர்தராஜன் அவர்கள் கிழக்கிலங்கையின் தென்கோடியில் அமைந்துள்ள பழம் பெரும் பதியாம் பொத்துவில் கிராமத்தில் பிறந்து பொத்துவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியில் அடியெடுத்து வைத்து தனது உயர்தரக் கல்வியை தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் கற்று இப் பாடசாலையில் சுமார் 10 வருடகால இடைவெளியின் பின்னர் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வானவாராய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பாடத்தில் புலமை பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிலகாலம் விரிவுரையாளராகக் கடமையாற்றி மெய்யியல் துறையை மேன்மையுறச் செய்யததோடு மெய்யியலில் மெய்யாகவே மேன்மையான மாணவர்கள் பலரை உலகிற்கு வெளிக்காட்டினார். மேலும் விவசாய ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவகத்தில் சிறிது காலம சேவையாற்றினார்.
ஆசிரியராக, பிரதியதிபராக, அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக பதவிகளை உயர்த்திக் கொண்ட அவர் திருக்கோவில் கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்று வருகைதந்தார்.
'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்திப் பல செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி வெற்றிகண்டார். பயன்படுத்தமுடியாத அறைகளைத் திருத்தி பயன்பாட்டிற்குட்படுத்தினார். வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிப்பதற்காக வாசிப்பதற்குரிய நூலக மேசை ஒன்றினை ஏற்படுத்தினார். வலய பரீட்சைகளை நடாத்துவதற்காக அதற்கான தனியான இடத்தினை ஒதுக்கி வேலைகளை இலகுபடுத்தினார். சிரமதானப் பணிகளினூடாக காரியாலயச் சூழலை அழகுபடுத்தினார். இவ்வாறு இவரின் செயற்பாடுகள் விரிவடைந்து கொண்டு சென்றமை அவரின் முகாமைமைத்துவத் திறனை வெளிக்காட்டிநிற்கின்றது.
இரக்க சுபாவமும், இளகிய மனமும் படைத்த இவர் அலுவலகப் பணியாளர்கள் தொடக்கம் தமக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரிகள் வரை அன்புடனும், சகோதரத்துடனும் பழகும் உயர்ந்த பண்பாளராகவும் விளங்கினார்.
இவரின் ஓய்வினை முன்னிட்டு பட்டிருப்பு வலய நலன்புரிச் சங்கம் இவரின் சேவையினைப் பாராட்டும் நிகழ்வு அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.மயில்வாகனம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆர். சுதிர்தர்தராஜன் அவர்களின் சேவையைப் பாராட்டி வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டதோடு அவரை கௌரவித்து சிறப்பரையினையும் நிகழ்த்தியிருந்தனர்.
0 Comments