Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பழமைபோற்றும் நாட்டின் நாடாளுமன்றில் அராஜகம்! மஹிந்தவிடம் கடிந்து கொண்ட தேரர்!!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நாடாளுமன்ற சம்பிரதாயத்தை அப்பட்டமாக மீறிய சம்பவங்களுக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டுமாயின், தேர்தல் ஒன்றை நடத்துவதே சிறந்த தீர்வாக அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காலை, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் வணக்கத்திற்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரரரை சந்தித்து, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட, வணக்கத்திற்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரர், நாடாளுமன்றில் இடம்பெற்ற சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
'நாம் மிகவும் பழமையான வரலாற்றுக்குச் சொந்தமானவர்கள். வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்." என இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்திருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மஹிந்த ராஜபக்ச "நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களுக்கும் சபாநாயகரின் செயற்பாடுகளே காரணம். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டுமாயின், தேர்தல் ஒன்றை நடத்துவதே சிறந்த தீர்வாக அமையும்" என குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை அந்தப் பதவியில் அமர்த்தியதை அடுத்து எழுந்த அரசியல் குழப்பம் தற்போது வரை தீர்வின்றி தொடர்கின்றது.
நாடாளுமன்றில் நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தற்போது நாட்டில் அரசாங்கமொன்று இல்லை என்று கூறிவரும் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் சட்டவிரோத அரசாங்கத்தின் உத்தரவுகளை ஏற்று நடக்க வேண்டாம் என்று முப்படையினர், பொலிசார் மற்றும் அரச பணியாளர்களை வலியுறுத்தி வருகின்றன.
எனினும் தாங்களே தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதாக கூறிவரும் மஹிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சரவையும் தொடர்ந்தும் அரசாங்கமாக செயற்பட்டு வந்தனர்.
எவ்வாறெனினும், மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படுவதற்கும் அவரது கட்சியினர் அமைச்சர்களாக செயற்படுவதற்கும் முடியாத வகையில் சிறிலங்கா மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments