மைத்ரிபால – ராஜபக்ச அரசியல் சதியால் நாட்டின் பொளாதாரம் மிக மோசமான நெருக்கடிக்கள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியிருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நவம்பர் 20 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றை நடத்தி, பொருளாதார ரீதியில் நாடு மிகவும்ஆபத்தான கட்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக அச்சம் வெளியிட்டார்.
ஒரு தனிப்பட்ட நபரின் துரோகம், அதிகார வெறி மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாகவே ஒட்டுமொத்த நாடும், நாட்டு மக்களும் பேரழிவை முகம்கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டிய மங்கள சமரவீர, துரிதமாக செயற்பட்டு இந்தப்பிரச்சனைக்கு முடிவு காணாவிட்டால் யாராலும் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியாது போய்விடும் என்றும் எச்சரித்திருக்கின்றார்.
நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் சட்டபூர்வமான பிரதமர், அமைச்சரவை மற்றும் நஜதி அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு என்றும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என்ற பெருந்தைக் கடனை செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த மங்கள சமரவீர, இந்தக் கடன் தொகையை செலுத்தாது காலத்தை இழுத்தடித்தால் சர்வதேச அரங்கிலும், பொருளாதார ரீதியாகவும் நாடு பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
“மஹிந்த மற்றும் அவரது அணியினர் கூறிவரும் அரசாங்கம் சட்டபூர்வமற்றது என்பதை சபாநாயகர் நாடாளுமன்றில் மிகத் தெளிவாக அறிவித்துள்ள நிலையில், சர்வதேச சமூகமும் இந்த அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாது” என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதனால் நாடாளுமன்றில் அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அரசாங்கமோ, நிதி அமைச்சரோ இல்லை. இதனால் அரசாங்கத்தை கொண்டுநடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்ள முடியாது. அதற்கான வழிகளும் இல்லை” என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் மங்கள சமரவீரவின் எச்சரிக்கைகளை நிராகரித்த மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் சர்வதேச சந்தைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, 2019 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர் கடனை உரிய நேரத்தில் செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்கான உடனடியாக இடைக்கால கணக்கறிக்கையொன்றை தயாரித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிபெறவும் திட்டமிட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இதனையடுத்து நாடாளுமன்றில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்வோம் என்றும் மஹிந்தவாதியான பந்துல குணவர்தன சூளுரைத்தார்.
எனினும் இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்ற மைத்ரி – மஹிந்த தரப்பால் முடியாது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சி எவ்வாறு அதனை செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
0 Comments