Home » » அரசியல் கைதிகளை இன்றே விடுதலை செய்யுங்கள்! - நாமலுக்கு கூட்டமைப்பு சவால்

அரசியல் கைதிகளை இன்றே விடுதலை செய்யுங்கள்! - நாமலுக்கு கூட்டமைப்பு சவால்

கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கினால், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்போம் என்று நாமல் ராஜபக்‌ஷ கூறுகிறார். அவருடைய தந்தை பிரதமர் பதவியை ஏற்றுள்ள நிலையில், அரசியல் கைதிகளை முடிந்தால் இன்றைக்கே விடுதலை செய்யட்டும். அவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் வவுனியா இளைஞர் மாநாடு, வவுனியாவில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'எத்தனை கோடி ரூபாய்க்களைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலைபோகமாட்டாது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் உறுப்பினரான மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. வியாழேந்திரன் மரம் தாவியுள்ளார். அவருக்கு உரிய நடவடிக்கைகளை எமது கட்சி எடுக்கும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் எம்மால் உருவாக்கப்பட்டவர்களே. இருவரும் தாம் ஏறிவந்த ஏணியை எட்டி உதைந்துள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில், அதாவது தமிழ் மக்களது வாக்குப் பலத்தில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கூட்டமைப்பைக் கூறுபோட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இது அவரது அரசியல் வாழ்வின் அழிவின் ஆரம்பமாகும். இதனை நாம் பகிரங்கமாகவே அறிவிக்கின்றோம். எமது உப்பினைத் தின்று எமது கட்சியில் இருந்து ஒருவரைத் திருடி அவரை அமைச்சராக ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். இவ்வாறான மோசமான செயலைச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒருபோதுமே எமது ஆதரவு இருக்காது. எமது மக்களைக் கூறுபோடுவதற்காக மைத்திரிபால சிறிசேனவை நாம் ஜனாதிபதி ஆக்கவில்லை.
தேர்தலில் தோற்றிருந்தால் ஆறடி நிலத்திற்குள் போயிருப்பேன் எனக்கூறிய சிறிசேனவைக் காப்பாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லவா?
இன்று எங்களையே பிரித்துப்போடும் சூழ்ச்சி செய்யும் கபட நாடகமாடும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மாறியிருக்கின்றார். அது அவரது அழிவிற்கான ஆரம்பம்” என அவர் மிகவும் ஆவேசமாகக் குறிப்பிட்டிருந்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |