செ.துஜியந்தன்
ஆணவம் தலைக்கு ஏறினால் அது ஒரு கட்டத்தில் அடங்கித்தான் ஆகவேண்டும். யாரெல்லாம் அதிகமாக ஆட்டம் போடுகின்றார்களோ அவர்களின் இறுதிக்காலம் நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களுக்கு முகம் கொடுத்து அழிந்து போகும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை சூரன் போர் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
இவ்வாறு சைவப்பிரசாரகர் கலைமாமணி செ.துஜியந்தன் தெரிவித்தார். பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி விரத்தில் சுரன் கதைபற்றிய விசேட சொற்பொழிவு ஆற்றும் போதே அவ்வாறு தெரிவி;த்தார். அங்கு தொடர்ந்து பேசியவர்...
எம்மிடமுள்ள ஆணவத்தை தாமாக ஒழித்தால் ஆண்டவன் தன் திரவடியை நம் தலைமீது வைப்பான். ஆணவத்தில் நாம் ஆடினால் ஆறடிமண் கூட உனக்குச் சொந்தமில்லை என்பதை முருகன் எமக்குணர்த்துவான். முருகப்பெருமான் சூரனுக்கு திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தார். அதனையெல்லாம் சூரன் கண்டுகொள்ளவில்லை அவனது மாயை அதனை மூடிமறைத்து. எமக்கள் இருக்கும் மும் மலங்களை நாம் ஒழிக்கும் போது முருகப்பெருமான் கருணைகாட்டவான்.
சூரனுக்கு கவசமாக விளங்கிய சூரனின் தம்பிமார் தாரகாசுரன், சிங்கமுகன், தருமகோபன் (சூரனின் மந்திரி), அக்கினிமுகாசுரன்(சூரனின் மகன்), பானுகோபன்(சூரனின் மூத்தமகன்) உட்பட சூரனின் மாயாஜாலங்கள் எல்லாம் எம் பெருமான் முருகக்கடவுளால் அழிக்கப்பட்டு சூரன் நிர்க்கதியாக நிற்கின்றான். அந்நேரத்தில் கூட சூரன் தன் தவறை உணரவில்லை.
முருகப்பெருமான் தன் படைத்தலைவன் வீரபாகுவை சூரனிடம் தூது அனுப்புகின்றார். அவன் அடைத்து வைத்திருக்கும் தேவர்களை விடுவிக்குமாறு கேட்கிறார் வீரபாகு. தூது சென்ற வீரபாகுவையே சிறையிலடைக்கும் படி உத்தரவு போடுகின்றான் சூரன். அதன் பின் தான் சண்டை உக்கிரமடைகின்றது. அன்று முருகனுக்கும் சூரனுக்கும் இடையில் நடைபெற்ற சூரன்போர் இன்று உலகநாடுகளுக்கு இடையில் அதிகாரமமதையில் நடைபெற்றுவருவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.
முருகக்கடவுள் பக்தர்களை வருத்துகின்ற கடவுள்ளல்ல. பக்தர்களைக் காக்கின்ற கடவுள். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு தன் வாகனமாகிய மயில் மீது ஏறி தயர்துடைக்க உடனே ஓடி வந்துவிடுவான. ஆதனால்தான் முருகளை கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என்கிறார்கள். தன் எதிரிக்கு கூட கருணைகாட்டியவன் முருகன். சூரனை முருகன் கொல்லவில்லை. அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன்னோடு வைத்துக்கொண்டுள்ளான். முருகனை வணங்குகின்றவர்கள். சேவலும் மயிலும் போற்றியென முருகனை துதிக்கின்றார்கள்.
அறிவையும், ஞானத்தையும், ஆரோக்கியத்தையம் தரும் முருகக்கடவுளை பயபக்தியோடு வழிபட்டால் உங்கள் வல்வினைகள் பஞ்சாய்ப்பறந்துவிடும் என்றார்


0 Comments