அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக பருவ மழை கடுமையாக தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால் காரைதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிதாக கிழக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு அனர்த்த முகாமைத்துவக்குழுவிற்கு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.
இராணுவமுகாமையும் நந்தவன சுனாமி மீள்குடியேற்ற வீட்டுத்தொகுதியையும் சுற்றி வெள்ளஅபாயம் எந்நேரமும் ஏற்படலாமென அவர் தெரிவித்தார். தாழ்நிலப்பகுதிகளில் வீடுவாசல்களிலும் வெள்ளம் தேங்கியுள்ளதால் சுகாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார். வீதிகள் வெள்ளத்தால் தாழ்ந்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்வியல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடங்காய்ச்சிகள் சிரமப்படுகின்றார்கள்.
காரைதீவுக்கிராமம் தாழும் நிலை ஏற்றபட்டபோது இராணுவத்தின் உதவியால் முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளம் கடலுக்குள் விடப்பட்டது.
விவசாய நிலங்களைக் கொண்ட காரைதீவில் கடுமையான வெள்ளம் காரணமாக மக்கள் இடம் பெயர வேண்டிய அவல நிலை தோன்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் அழிவுற்ற வீடு மற்றும் விபரங்கள் தொடர்பில் அழிவு பதிவுகளை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவப்பிரிவு ஏற்பாடுகளைசெய்யவேண்டும் என கிழக்கு அனர்த்த குழுவுக்கு தவிசாளர் ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இதுவரை இப் பிரதேசத்தில் வெள்ள அனர்தம் காரணமாக இடைத்தங்கல் முகாங்கள் அமைக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments