Home » » அதிகரிக்கும் சிறுவர் வன்முறைகளும் அதற்கான காரணங்களும்…

அதிகரிக்கும் சிறுவர் வன்முறைகளும் அதற்கான காரணங்களும்…


சி.திவியா-

சிறுவர் வன்முறை மற்றும் துஸ்பிரயோகம் என்பது இன்று பல்வேறு இடங்களிலும் நடபெற்று வருவதனை நாளாந்தம் அறிய முடிகின்றது. வேலைத்தளங்கள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், சிறுவர் இல்லங்கள் என அவை நீண்டு சென்று இன்று வீட்டுக்குள் அவை அரங்கேறத் தொடங்கிவிட்டன. சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துல், பாலியல் தொல்லை கொடுத்தல், சிறுவர்களை வேலைவாங்குதல், சிறுவர்களை துன்புறுத்துதல், சிறுவர்களுக்கு அடித்தல், சிறுவர்களின் மனத்தை பாதிக்கும் வகையில் செயற்படல், மன உளைச்சலை ஏற்படுத்தல் என பல வடிவங்களில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும் நடைபெறுகின்றது. இவை அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்கவும் முடிகிறது.
இலங்கையில் நாளாந்தம் 16 வயதிற்கு குறைந்த 4 சிறுமிகள் பாலியல் வன்புனர்ச்சிக்குட்படுத்தப்படுகிறார்கள் என அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த இரண்டு வருடத்துக்குள் சிறுவர் பாலியல் வன்புனர்ச்சி உட்பட சிறுவர் துஸ்பிரயோகம் 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2017, 2018 ஆம் ஆண்டில் 1089 சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்புனர்ச்சி மற்றும் சிறுவர் வன்முறைகள் தொடர்பான முறைபாடுகள் வவுனியா மாவட்ட செயலக புள்ளிவிபரங்களில் பதிவாகியுள்ளது.
முறைப்பாட்டின் தன்மை எண்ணிக்கை
2017      2018 (மார்ச் வரை)

பாடசாலை இடைவிலகல்

230                 65

18 வயதின் கீழ் திருமணம், கர்ப்பம்

26                   6

உடல் ரீதியான துன்புறுத்தல்

126                 9

மனரீதியான துன்புறுத்தல்

159                 32

பாலியல் துன்புறுத்தல்

28                   04

புறக்கணித்தல்
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல்

175                 33
03                   –

ஏனையவை

 05                   –
இதில் பாடசாலை இடைவிலகியவர்கள் தொடர்பாக 230 முறைப்பாடுகள், 18 வயதிற்க்கு உட்பட்டவர்கள் திருமணம் செய்யாமல் குழந்தைபெற்றவர்கள் தொடர்பான 26 முறைப்பாடுகள், உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் தொடர்பான 126 முறைப்பாடுகள், மனரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் தொடர்பான 159 முறைப்பாடுகள், துஸ்பிரயோகங்கள் தொடர்பாக 28 முறைப்பாடுகள், புறக்கணித்தல் தொடர்பாக 175 முறைப்பாடுகள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான 5 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இம்முறைப்பாடுகள் பல்வேறு வழிகளிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் தலைமை காரியாலயத்தில் 65 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதுடன், சிறுவர் துன்புறுத்தல் தொடர்பான இலவச தொலைபேசி இலக்கமான 1929 மூலம் 97 முறைப்பாடுகளும், அலுவலக மற்றும் உத்தியோகத்தர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக 248 முறைப்பாடுகளும், கிராம, பிரதேச மட்ட அமைப்புகள் மற்றும் சிறுவர் பெண்களுடன் தொடர்புடைய அமைப்புக்கள் மூலம் 208 முறைப்பாடுகளும் கிடைக்கப்பட்டுள்ளன. இதில் 299 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், 224 முறைப்பாடுகளுக்கு தற்காலிக தீர்வு எட்டப்பட்டவையாகவும், 193 முறைப்பாடுகள் தலைமை காரியாலயங்களுக்கு தீர்வுக்காக அனுப்பப்பட்டும் உள்ளது. இதில் 90 சதவீதமான முறைப்பாடுகள் வன்புனர்ச்சிகள் நியதிச் சட்ட வன்புனர்ச்சிக் குற்றங்களாகும். அதாவது 16 வயதுக்கு குறைவான ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் பாலுறவு கொண்டாலும் அது நியதிச் சட்ட வன்புனர்ச்சிக் குற்றமாகும். 16 வயத்திற்கு மேற்பட்ட ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் அப்பெண்ணின் சம்மததுடன் பாலுறவு கொண்டால் அது வன்புனர்ச்சி ஆகாது என்பது சட்ட வரைவிலக்கணமாகும்.

thi2
வவுனியா அரச அதிபர் எம்.ஐ.ஹனீபா
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த காலங்களை விட அதிகரித்து வருகிறது. தொலைபேசி பாவனை, இணையம், போதைவஸ்து பாவனை, தவறான நண்பர் கூட்டம் என்பன இந்த அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதுடன் பெற்றோர்கள் சரியான முறையில் தமது பிள்ளைகளை கண்காணிக்காமையும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற துணைபுரிந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.ஹனீபா தெரிவித்துள்ளார்.
பொதுவாக பெண்கள் தாம் விருப்பத்துடன் ஒன்று சேர்ந்தாலும் அது வெளியில் தெரிய வரும் போது பெண்கள் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் பாலாத்காரமாக பாலுறவுக்கு உட்படுத்தப்படுகின்ற பெண்கள், சிறுவர் தொடர்பான விடயங்கள் அதிகமாகவுள்ளது. பாலியல் உறவு என்பது திருமணத்தினூடாக சட்டரீதியாகவும், திருமணத்திற்கு அப்பால் சம்மந்தப்பட்ட தரப்பினரின் பூரண சம்மதத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற போது, அது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக்ககூடியதாகவுள்ளது. உயிரினங்களுக்கு இயற்கையாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய உடல், உளத்தேவையாக பாலுறவு அமைகிறது. இதனை பிள்ளைகளை பெற்றுக்கொள்வதற்கான அதாவது மறு உற்பத்திகான ஒரு உறவே பாலுறவு எனலாம்.
thi3பெண்கள் காட்சிப்படுத்தலுக்குரிய பண்டமாகவும், பாலியலுக்குரிய நுகர்வுப் பண்டமாகவும் முதலாளித்துவ சமூகத்தின் அபிவிருத்தியின் விளைவாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் பெருபாலான சிறுவர்களும், பெண்களும் வயது வந்த இரு பாலாரினதும் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பலவீனமான, வசதியான பண்டங்களாக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்புலத்தில் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்களை பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சுகாதாரம் மற்றும் மனோவியல் ரீதியாகப் பார்ப்பதன் மூலம் அதனை கட்டுப்படுத்தி நீண்ட காலத்தில் இல்லாமல் செய்வதற்கான ஒரு சமூகத்தை படைக்கும் நோக்கத்துடன் முன்னேற முடியும்.
பெரும்பாலான பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் பிரிந்து வாழ்வோராகவோ, வெளிநாட்டில் பண்புரிவோராகவோ உள்ளனர். பாதிக்கப்பட்டோர் கூடுதலாக குறைந்த வருமானங்களில் வாழும் குடும்பங்களை சேர்ந்தவர்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான காலப்பகுதியில் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனைகளில் ஒன்றாக பொருளாதாரப் பிரச்சனை காணப்படுகின்றது. இப்பொருளாதார பிரச்சனை காரணமாக பல பெண்கள் தமது குடும்பங்களையும், பிள்ளைகளையும் பிரிந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றார்கள். இவ்வாறு செல்பவர்களில் சிலர் முறையான அனுமதி பெற்று செல்கின்ற அதேவேளை, இன்னும் சிலர் முறையான அனுமதிகளைப் பெறாது முகவர் ஊடாக செல்கின்றார்கள். இவர்கள் சென்ற பின்னும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏராளம். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற சிலர் வீடு திரும்பாமையும், சிலர் சடலமாக மீண்டு வந்தையும் நாம் நாளாந்தம் அறியக் கூடியதாகவும் உள்ளது. இவ்வாறு செல்பவர்கள் தமது எதிர்காலம் குழந்தைகள், தமக்கு இதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து போதியளவில் சிந்திக்க தவறிவிடுகின்றனர். இத்தகைய பெண்கள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொள்கின்றார்களே தவிர, தமது குடும்பம் இதனால் சீரழியும் என்பதை துளியளவும் நினைப்பதில்லை. இதனால் தனித்து விடப்படுகின்ற பிள்ளைகள் பல ஆபத்துக்களை சந்திக்கின்றார்கள்.
thi4வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் வாழும் 14 வயதில் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமி ஒருவர் தெரிவிக்கையில், எனது அப்பா கூலிவேலை செய்கிறார். எனக்கு மூன்று சகோதாரர்கள். குடும்ப வறுமை காரணமாக எனது அம்மா மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைவாய்ப்புக்கு சென்றுள்ளார். இதன்பின் நாம் பாட்டியுடனேயே வசித்து வந்தோம். அம்மா போனதில் இருந்து அப்பாவும் ஒழுங்காக வீட்டிற்கு வருவதில்லை. பாட்டியும் கூலி வேலைக்கு செல்கின்றார். வீட்டில் ஒருவரும் இல்லாத நேரம் பக்கத்து வீட்டு அண்ணா வந்து எங்களுடன் நின்று என்னை தவறாக பயன்படுத்தினார். பல தடவை அவ்வாறு நடந்த பின்னரே பாட்டியிடம் தெரியப்படுத்தி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டோம். தற்போது இந்த பிரச்சனையால் நான் பாடசாலை செல்வதில்லை எனத் தெரிவித்தார்.
தாய்மார் வெளிநாடு சென்றதும் கணவன் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இத்தகைய பிரச்சனைகள் அந்த குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றி விடுகின்றது. என்ன தான் பணத்தை சம்பாதித்தாலும் மீண்டும் வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியாத நிலையே இருக்கிறது. இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு செல்கிறார்கள். இங்கு கணவன்மார் போதைக்கு அடிமையாகிறார்கள். பலருடனான தவறான தொடர்பு, மறுமணம், சிறுவர் துஸ்பிரயோகம் என அவர்களது காலங்கள் சீரழிகின்றது. சிறுவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகும் சந்தர்ப்பங்களும், சிறுவர் துஷ்பிரயோகங்களும், இளவயது திருமணங்களும், விவாகரத்துக்களும் ஏற்படுகின்றது.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஒருவர் தெரிவிக்கையில், எனக்கு அப்பா இல்லை. அம்மா கூலி வேலைக்கு தான் செல்கின்றார். எனக்கு 3 சகோதாரர்கள். அம்மாவின் வருமானம் எமது குடும்பத்திற்கு போதாது. அதனால் நான் பாடசாலையையில் இருந்து இடைவிலகி தற்போது கூலி வேலைக்கு செல்கின்றேன். எமது குடும்ப நிலை காரணமாக எனது படிப்பும் இடையில் நின்றுள்ளது எனத் தெரிவித்தார்.
thi5
உத்தியோகத்தர் யோ.ஜெயக்கெனடி குறிப்பிட்டார்.
பாலியல் வன்புனர்ச்சி பற்றி இலங்கையின் தண்டணைச் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடைய ஆரம்ப சட்டத்தில் இருந்த தண்டணையை விட அதிகரித்த தண்டனையையும், பாலியல் வன்புனர்ச்சி குற்றத்தை நிரூபிக்கும் தராதரத்தை நெகிழ்வுப்படுத்தும் வகையிலும் 1995 தண்டனைச் சட்ட கோவைக்கு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தச் சட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தாலும், வன்புனர்ச்சியாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
thi6இது தவிர, இலங்கை சட்டத்தின் படி பாலியல் வன்புனர்ச்சி சம்பந்தப்பட்ட குற்றங்கள் ஆரம்பத்தில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட போதும் சந்தேக நபருக்கு எதிரான வழக்குகளை சட்டமா அதிபர் மேல் நீதின்றத்தில் தாக்கல் செய்வார். சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்த வரையில் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் வன்புனர்ச்சி, சிறுவர்களை பாலியல் தொழிலில் உட்படுத்தல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், சிறுவர்களை கடத்தி விற்றல் போன்றவை அடங்கும். இங்கு சிறுவர்களை பாதுகாக்க வேண்டியவர்களே அவர்களை சின்னபின்னமாக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றது. இது வேலியே பயிரை மேய்ந்த கதையாகும்.
பாலியல் தொழில் வறுமை காரணமாக தொடங்கியதாகச் சொல்லப்பட்ட போதும் சட்டவிரோதமான விடுதிகளில், வாகனங்களில் மறைமுகமான சட்ட அங்கீகாரத்துடன் பாலியல் தொழிலானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு இரு பாலாரான சிறுவர்களும் விநியோகிக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறுவர்கள் ஆபாசத் திரைப்படங்கள், படக்காட்சிபடுத்தல் என்பவற்றால் தூண்டப்படுகின்றனர். அத்துடன் சிறுவர்களை கடத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறனர்.
பாலியல் பழக்கவழக்கங்கள் பண்பாட்டு ரீதியாக ஒழுக்கத்தின் மையமாக கொள்ளப்பட்ட போது விழுமியமாக பார்க்கப்பட வேண்டும். பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் தன்மை நிலவி வருகிறது. அது மட்டுமல்லாது பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டமையால் பிறந்த பிள்ளைகளை பண்பாட்டு ஒழுக்கம் என்ற நோக்கில் சமூகத்திலிருந்து நிராகரித்தும் தள்ளியும் வைக்கின்றனர்.
இதேவேளை, துஷ்பிரயோகங்களை மேற்கொள்வோர் பெரும்பாலும் சமூகத்தின் பிடியிலிருந்து தப்பியே இருக்கின்றனர். இந்தநிலை அவர்களை மேலும் குற்றச்செயல்களை தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தும் செல்கிறது. பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபடுவோர் பணம் படைத்தவர்களினால் அறிமுகம் செய்யப்பட்ட ஆபாசத்திரைப்படங்கள், ஆபாச இணையத்தளங்கள் என்பவற்றின் ஈர்ப்பால் அவர்களின் நுண்ணிய உணவுத் தூண்டலினாலும் தூண்டப்பட்டு அவர்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கேளிக்கை விடுதிகளை நாடுகின்றனர். ஆனால் அவ்விடுதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை எல்லோராலும் செலுத்த முடியாது. இதனால் சாதாரண சூழலில் உள்ள அப்பாவிச் சிறுவர்களும் பெண்களும் இவர்களின் இச்சைகளுக்கு இரையாகின்றனர்.
thi7பாலியல் குற்றச் செயல்கள் மற்றும் சிறுவர் வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடுகள் அதிகரித்த போதம் பலர் தாமாக முன்வந்து இததகைய முறைப்பாடுகளை செய்ய விரும்பதில்லை. இதன் காரணமாக குற்றவாளிகளுக்கு எதிராக எம்மால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு பொலிசார் விரைந்து செயற்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்வ ஆராய்ச்சி தெரிவித்தார்.
இதேவேளை குற்றச்செயற்பாடுகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும் மது, போதைவஸ்துப் பழக்கத்திற்கு அடிமையானவர்களாகவே உள்ளனர். குறிப்பாக இளம் வயதினர் மற்றும் மாணவர்கள் கஞ்சா, சிகரெட், ஹெரோயின், கொக்கெயின், அபின், போடீன் போன்ற போதைவஸ்துப் பாவனைக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்த பழக்க வழக்கங்களுக்கு ஏதுவானதாக தொழில் நுட்பத்தின் பாதகமான வளர்ச்சி காணப்படுகின்றது.
DR-Sivathasகுற்றம் புரிபவர்களுக்கும், துஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்டவர்களும் மீள்வதற்கு முடியாத கடினமான மனரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவகையில் அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனைகளை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். துஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்டோர் உளரீதியாக மட்டுமல்லாது உடல் ரீதியாகவும் கஷ்டங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் மருத்துவ உள சிகிச்சைகளை வழங்குவது அவசியமானதாகும். அத்துடன் இவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டு சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றார்கள். இத்தகைய குற்றச்செயல்களை நாளாந்தம் கேட்டும் பார்த்தும் வாசித்தும் வரும் பெண்களும், சிறுவர்களும், பெற்றோர்களும் தங்களுக்கும் இது ஏற்பட்டுவிடுமோ என்ற உளவியல் பயத்தால் கஷ்டப்படுகின்றனர். எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டோர் தொடர்பில் உளவியர் ரீதியாக ஆற்றப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என மனநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
மனிதவளம் நாட்டுக்கும், சமூகத்திற்கும் முக்கியமானதாகும். இதில் பாதிக்கப்படும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரும்பாலான குற்றமிழைக்கும் ஆண்களும் அடங்குகின்றனர். இவ்வாறான குறைபாடாக இருக்கும் மனிதவளம் குன்றியே உள்ளது. குன்றிப்போய் உள்ள மனித வளத்தினால் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொள்ள முடியாது.
amirthalingamஒரு குழந்தை பிறந்து பெற்றேர்களின் கைகளில் இருந்து பிரிந்து தனது மூன்றாவது வயதில் முன்பள்ளியில் சேர்க்கப்படுகின்றது. பின்னர் ஆறு வயதில் பாடசாலையில் சேர்க்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆசிரியர்களால் வளர்க்கம்பட்டு பிள்ளைகள் தமது 18 ஆவது வயதில் ஒரு மனிதனாக சமூகமயமாக்கப்படுகின்றது. இவ்வாறு சமூகமயப்படுத்தப்படும் மாணவர்கள் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்து அல்லது பல்கலைகழக பட்டப்படிப்பினை பூர்த்தி செய்து சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு தூண்டவேண்டும். இதற்கு ஆலயதர்மகத்தாசபை, சனசமூகநிலையம், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் மகளீர் சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், கலை இலக்கிய செயற்பாட்டு மன்றங்கள் போன்றன இவர்களை இணைத்து செயல்படவேன்டும். அவ்வாறு செயல்படுவதன் மூலம் ஒரு ஆளூமை மிக்க, தைரியமான, ஒழுக்கமுள்ள மனிதர்களாக மாற்றி வாழ்கையை எதிர் நீச்சல் போட்டு தைரியமாக எதிர்கொள்ளக் கூடிய மனிதர்களாக மாற்ற முடியும் என வவுனியா தெற்கு வலய உதவி கல்விப்பணிப்பாளர் சு.அமிர்தலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே வக்கிரத்துக்கு உட்படுவோர், வக்கிரகங்களை புரிவோர் ஆகியோரை மீட்கும் நோக்கில் புனர்வாழ்வு பற்றிய கவனம் செலுத்தப்படவேண்டியதன் அவசியம் உருவாகியுள்ளது. புனர்வாழ்வு மற்றும் உடல், உள ரீதியான சிகிச்சைகளை இவர்களுக்கு வழங்குவதன் மூலம் ஆக்க பூர்வமான மனித வளமாக இவர்களையும் மாற்ற முடியும். குறிப்பாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிகளவில் இடம்பெற்று வரும் பிரதேசங்களை இலக்காககொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை அரசு ஆரம்பித்து வைத்தல் வேண்டும். போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் இளம்பெண்கள் மீது எடுத்துவரக்கூடிய தீங்கினை புரிந்துகொள்ளச் செய்யும் விதத்தில் சமூகங்கள், பாடசாலைகள், இளைஞர் குழுக்கள் ஆகிய தரப்பினருக்கு விழிப்புணர்வூட்டுதல் வேண்டும். இதற்கான உபாய ரீதியான ஒரு பிரச்சார இயக்கம் உருவாக்கப்பட்டு அதில் தேசிய மற்றும் உள்ளுர் ஊடகப்பிரச்சாரங்களையும் சமூகத்தலைவர்கள், பொலிசார் மற்றும் சட்டத்தை அமுல்செய்யும் ஏனைய ஆளனியினர், அரசாங்க (சுகாதார மற்றும் மருத்துவத் துறை) அதிகாரிகள் ஆகியோரையும் உள்ளடக்குதல் வேண்டும்.
அத்துடன் சமூகங்கள், பாடசாலைகள், இளைஞர் குழுக்கள் ஆகிய தரப்பினருக்கு விழிப்புணர்வு செய்வதுடன் அறநெறிக்கல்வியை (மறைக்கல்வியை) கட்டாயமாக கற்கவேன்டும் என்று ஒரு நிபந்தனையை அமுல் செய்து கட்டாயக்கல்வியாக அறநெறிக்கல்வியை போதிக்கவேண்டும். பெரும்பாலான சிறுவர்கள் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் பல்வேறு பட்ட கஸ்டங்களில் வாழ்கின்றனர். இவர்களது பெற்றோர் நாட் கூலிக்கு வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்வோராக இருக்கின்றனர். நாட் கூலி என்பது மிக மிகக் குறைவான வருமானம். அதிலும் நிச்சயமற்ற தொழில். ஆகவே நிச்சயமற்ற வருமானம். இவ்வாறான நிலையில் தமது குழந்தைகளுக்கு ஒழுங்கான உணவையோ கல்வியையோ வழங்க முடியாதவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலமாவது நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக இவ்வர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு செயல்திட்டங்களை செயல்படுத்தவேண்டும். இத்தகைய தூரநோக்கு கொண்ட செயற்பாடுகளே சிறுவர்களினதும், பெண்களினதும் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதி செய்யும்.
N5
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |