ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருட காலத்திற்கு இரத்து செய்ய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுதாபனங்கள் மற்றும் சபைகளுக்கான வாகன இறக்குமதிகளை மறு அறிவித்தல் வரை நிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அரச ஊழியர்களுக்காக விநியோகிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை 6 மாத காலத்திற்கு இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப் பகுதிக்குள் கடன் அனுமதி பத்திர விநியோகிக்க நடவடிக்கைகளை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐபிரிட் வாகனங்களுக்கான முற்கொடுப்பனவு முறைமையின் கீழ், வாகன பெறுமதியில் 50 வீதத்தை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குளிர்சாதனபெட்டிகள், குளிரூட்டிகள்,தொலைக்காட்சிகள், வாசனை திரவியங்கள், கையடக்கத் தொலைபேசிகளும், ஏனைய தொலைபேசிகளும், சலவை இயந்திரங்கள், பாதணிகள் மற்றும் டயர் இறக்குமதியின் போது, அதன் பெறுமதியில் 100 வீதத்தை முதலீடு செய்ய வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கம் ரூபாவின் பெறுமதி மாற்று விகிதம் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகவும் அதன்பிரகாரம் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments