Home » » மருத்துவ உதவியையும் நிராகரித்து அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

மருத்துவ உதவியையும் நிராகரித்து அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!

தமது விடுதலை தொடர்பில் அரசாங்கம் அசமந்தப்போக்குடன் செயற்படுவதால், இன்று முதல்,தமக்கான மருத்துவ உதவிகளையும் தவிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அநுராதபுரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள், தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்துக்கு அரசியல் கைதிகள் வழங்கியுள்ள இறுதி சிவப்பு எச்சரிக்கை இதுவெனவும், இவர்களின் விடுதலை தொடர்பில் அசமந்தப்போக்குத் தொடருமாயின், நீராகாரத்தையும் அவர்கள் புறக்கணிப்பார்கள் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புத் தெரிவித்துள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல், இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அசமந்தப் போக்கு தொடருமாயின் நாட்டில் ஏற்படப்போகும் அரசியல் கொந்தளிப்புக்கு, அவர் முகங்கொடுக்கத் தயாராக வேண்டும்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல் கைதிகள், 14 நாள்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், எழுந்து நிற்கவும் பேச முடியாத நிலையிலும் அவர்களின் உடல் நிலை படுமோசடைந்துள்ளது.
தொடர்ந்து 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நிலை படுமோசடைந்திருக்கும் இவர்கள், மருத்துவ உதவிகள், நீராகாரங்களைத் தவிர்த்துப் போராட்டத்தில் ஈடுப்படப்போவதால், பாரதூரமான விளைவுகள் ஏற்படக்கூடும்.
வாழ்க்கையின் பாதி நாள்களை சிறைச்சாலையில் கழித்த அவர்கள், மீதி நாள்களையாவது வாழ விரும்பி ஆரம்பித்திருந்த போராட்டம், அவர்களின் மரணத்தில் முடிவடைந்து விடுமோ என்ற பயம், ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் தொற்றியுள்ளதாகவும் இதன்போது அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இக்கைதிகள் தொடர்பான முடிவை, 2 அல்லது 3 நாள்களுக்குள் வழங்குவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன் எம்.பி, சட்டமா அதிபர் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், சட்டமா அதிபரால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும், அவரின் வாக்குறுதியை நம்புவதற்கு அரசியல் கைதிகள் தயாராக இல்லை என, அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும், அவர்களுக்கு இருக்கும் இறுதி நம்பிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே எனவும் தெரிவித்த அவர், ஆகவே ஜனாதிபதியும் அவர்களை ஏமாற்றிவிட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |