Home » » 4 நீள வாளுடன் மாட்டினார் இளைஞர்! - தாய் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து கைது

4 நீள வாளுடன் மாட்டினார் இளைஞர்! - தாய் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து கைது

சுமார் 4 அடி நீளமுடைய கூரிய வாள் ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மகனின் அச்சுறுத்தல் தொடர்பில் தாயார் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் அவரது வீட்டுக்குச் சென்றிருந்த பொலிஸாரே வாளை மீட்டதுடன், சந்தேகநபரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார். “கோண்டாவில் பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் தனது மகனால் தனக்கு அச்சுறுத்தல் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார். தன்னுடன் மகன் முரண்படுவதாகவும் அதனால் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குடும்பப் பெண்ணின் முறைப்பாடு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது மகனிடம் வீடு தேடிப் பொலிஸார் சிலர் விசாரணைக்குச் சென்றிருந்தனர். அங்கு கூரிய வாள் ஒன்று மீட்கப்பட்டது. அதனை தனது உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடவேண்டும்” என்று பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
“சந்தேகநபர் அயலில் உள்ள ஆலயத்தின் வழிபடுவோர் சபை உறுப்பினராக உள்ளார். அந்த ஆலயத்தில் அண்மையில் நவராத்திரி வழிபாடுகள் ஆரம்பமாக உள்ளன. நவராத்திரி நிறைவு நாளின் மானம்பூத் திருவிழா இடம்பெறவுள்ளது. அந்தத் திருவிழாவின் போது வாழைவெட்டு உற்சவம் இடம்பெறும். அதற்குப் பயன்படுத்தும் ஆலயத்துக்குரிய வாள்தான் பொலிஸாரால் சந்தேகநபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. அந்த வாளை தோய்ந்து (சீரமைத்து) அதனை ஆலயத்துக்கு வழங்க என வீட்டுக்கு எடுத்து வந்து வைத்திருந்தார். சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வே.விஜயரட்ணம் மன்றுரைத்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று சந்தேகநபரை வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |