மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பனிச்சையடிமுன்மாரி கிராமத்தியோகத்தர் பிரிவில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்காமையினால், குடிநீருக்காக மிகவும் சிரமத்தினை, எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிராமசேவையாளர் பிரிவு, வட்டியாமடு, பத்தர்குளம், பனிச்சையடிமுன்மாரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளதுடன், 99குடும்பங்களையும் கொண்டுள்ளது. குடியிருப்புக்களும் பரந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், குறித்த பகுதியில் 5நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு நீர் வழங்கப்பட வேண்டுமென்ற நிலையிலும், எந்தவொரு நீர்தாங்கிகளும் இதுவரை வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படவில்லையெனவும் கவலை வெளியிடுகின்றனர். இதனால் அதிக தூரம் குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்காக சென்று வருகின்ற நிலை காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.
கடந்த ஆடி மாதத்திலிருந்து இக்குடிநீர்ப்பிரச்சினை உள்ளதாகவும், இது தொடர்பில், குறித்த பகுதியின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதுதொடர்பில், கிராமமட்ட உத்தியோகத்தர்களை தொடர்புகொண்டு வினவிய போது, உரிய திணைக்கள அதிகாரி ஊடாக இப்பிரச்சினை தொடர்பில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.
மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளரிடம் இது தொடர்பில் வினவிய போது, தேவையான குடிநீரினை வழங்குவதற்கான குடிநீர் உள்ளபோதிலும், நீர்த்தாங்கி இல்லாமையினால், குறித்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லையெனவும். ஓரிரு வாரங்களில், நீர்தாங்கிகள் பெறப்பட்டு குடிநீர் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
0 Comments