Home » » முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு - நள்ளிரவில் பதற்றம்

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு - நள்ளிரவில் பதற்றம்

முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் கொழும்பு அமைச்சர்களின் ஆதரவுடன், சிங்கள மீனவர்கள் வாடிகளை அமைத்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்குச் சென்ற கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, மீனவர்களுடன் பேச்சு நடத்தி, சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடியை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார். இதையடுத்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போராட்டத்தை நிறுத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை, நாயாறு பகுதியில் உள்ள சிங்கள மீனவர்கள் மீண்டும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் மீன்பிடிக்க முயன்ற போது, தமிழ் மீனவர்களின் குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் நாயாறு பகுதியில் இருந்து தமிழ் மீனவர்களின் வாடிகள், படகுகள், வலைகள் திடீரென தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் எட்டு வாடிகள், இரண்டு படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீனவர்களின் உடைமைகள் எரிந்து நாசமாகின.
இந்தச் சம்பவத்தினால் மீனவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதுடன், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பலரும், மீனவர்களுடன் கலந்துரையாடி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |