Advertisement

Responsive Advertisement

கொழும்பில் விரைவில் ”லைட்” ரயில் சேவை


கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன தெரிவித்தார்.

இந்த வீதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அது கடுவல வரையில் விரிவுபடுத்தப்படும். இதற்கமைவாக இலகு ரயில் பாதைகள் ஐந்து 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்பட உள்ளன.

இதில் ‘சிவப்பு’பாதையாக அடையாளப்படுத்தப்பட்ட திட்ட நடவடிக்கைப் பணிகள் றாகம, கடவத்தை, புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி வரையில் இடம்பெறும்.பசுமை வீதியாக அடையாளப்படுத்தப்படும் இரண்டாவது கட்டப் பணி களனி தெமட்டக்கொட, பிலியந்தலை ஊடாக மொரட்டுவை வரையில் இலகு ரயில் சேவைக்காக அமைக்கப்படவுள்ளது.

மூன்றாம் கட்டம் ‘ரோஸ்’ நிற இலகு ரயில் பாதையாக அமைக்கப்பட உள்ளது. வத்தளை டயர் கூட்டுத்தாபன சந்தியில் இருந்து அங்கொட, பத்தரமுல்லை ஊடாக கொட்டாவை வரை அமைக்கப்படும். இந்த வீதிக்கான தள ஆய்வறிக்கைப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

இந்த மூன்று இலகு ரயில் பாதைகளும் அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த ரயில் பாதைகள் இலகு மின்சார ரயில் சேவைக்காகப் பயன்படுத்தப்படும். இது மூன்று ரயில்பாதைகளுக்கு வரையறுக்கப்படும் என்றும் பெருந்தெருக்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன மேலும் தெரிவித்தார். -(3)

Post a Comment

0 Comments