மட்டக்களப்பில், கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பகுதியில் பெண்கள் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
|
இதனையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு குழுவினரால், பிறைந்துரைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 360 கிராம் கஞ்சாவும் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் முப்பதும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் மிக நீண்ட நாட்களாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் இவர்களிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சாவை ஐநூறு ரூபாவுக்கு விற்பனை செய்யும் கஞ்சா பொதிகள் 110 பக்கட்டுக்களும் பொதி செய்வற்கு பயன்படுத்தும் பொலிதீன், மெழுகுதிரி, கஞ்சாவை எடை வைக்கும் தராசு போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சகோதரிகள் என்பதுடன் இவர்கள் தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
|
0 Comments