Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அமைச்சரவை தீர்மானங்கள்


2018.05.09 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

(இது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நேரடியாக பெறப்பட்ட தமிழ்மொழிபெயர்ப்பாகும்)

01.புதிய குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டமூலம் (விடய இல. 05)

காலத்தின் தேவையினை கவனத்திற் கொண்டு, 1948ம் ஆண்டு 20ம் இலக்க குடிவரவு, குடியகழ்வு சட்டத்தினை சாராம்சம் செய்து புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக துறைசார்ந்தோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் சிபார்சுகளை கருத்திற் கொண்டு குறித்த திணைக்களத்தினால் புதிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்களை உள்ளடக்கி, புதிய சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ எஸ்.பி.நாவின்ன ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. அமெரிக்காவின் Millennium Challenge Corporation – MCC மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் வழங்குதல் மற்றும் செயற்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் (விடய இல. 07)

அமெரிக்காவின் Millennium Challenge Corporation – MCC நிறுவனமானது இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக வேண்டி அடுத்து வருகின்ற 05 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான திட்டங்களுக்காக வேண்டி, 7.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த தொகைக்கு மேலதிகமாக 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மேலதிக நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி மற்றும் அதன் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவின் Millennium Challenge Corporation – MCC நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தினை, முழுத்தொகை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களாக திருத்தம் செய்து கைச்சாத்திடுவது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்யும் முறையினை மேலும் முறைப்படுத்தல் (விடய இல. 08)

சர்வதேச பாடசாலைகளை முறையான முறையில் பதிவு செய்ய வேண்டிய அத்தியவசியமான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அதனடிப்படையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் வகையில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு முறையான வரையறைகளை தயாரிக்கும் வரையில், கல்வி அமைச்சின் மூலம் வழங்கப்படுகின்ற சிபார்சுகளின் அடிப்படையில், சர்வதேச பாடசாலை அமைப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முறையினை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்தல், வரையறுத்தல், நிர்ணயித்தல், தரத்தினை உறுதி செய்தல் மற்றும் மேற்பார்வை செய்வதற்கு தேவையான சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை ஸ்தாபித்தல், அப்பாடசாலைகளின் ஆசிரியர்களை பயிற்றுவித்தல், சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் உள்நாட்டு மாணவர்களுக்கு சிங்களம், தமிழ், சமயம் மற்றும் வரலாறு ஆகிய பாடவிதானங்களை கற்பிப்பதை கட்டாயப்படுத்தல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றினை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.

04. சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்புக்களை விருத்திச் செய்து கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 09)

சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்புக்களை விருத்திச் செய்து கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. சுகாதார பிரிவினை விருத்தி செய்யும் வேலைத்திட்டம் (விடய இல. 11)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியின் கீழ் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சுகாதார பிரிவினை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயற்படுத்துவதற்காக, சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் மற்றும் உரிய மாகாண மட்டங்களில் வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கும், அதற்கு அவசியமான ஆளணிகளை சேர்த்துக் கொள்வதற்குமாக சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. தேசிய ஒளடத உற்பத்தியினை விருத்தி செய்வதற்காக வேண்டி இலங்கை அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் முதலீட்டாளர்களுடன் இணை வியாபாரங்களை ஆரம்பித்தல் (விடய இல.14)

தேசிய ஒளடத உற்பத்தியினை விருத்தி செய்வதற்காக வேண்டி இலங்கை அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் மூலம் முதலீட்டாளர்களுடன் இணை வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. குறித்த இணை வியாபார முறையில் உள்வாங்கப்படுவதற்காக இலங்கை அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு சட்ட ரீதியிலான அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளும் நோக்கில், 1987-07-04ம் திகதிய 456ஃ21ம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் பிரிசுரிக்கப்பட்டுள்ள 1957ம்ஆண்டு 49ம் இலக்க அரச கைத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை திருத்தம் செய்வது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments