யாழ்ப்பாணம் வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் சுமார் ஆயிரத்தி இருநூறு குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.யாழ் வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த 2014ம் ஆண்டு தரவுகளின்படி சுமார் ஆறாயிரத்து ஐந்நூறு ஏக்கர் பொதுமக்களுக்கு சொந்தமான நிலப்பரப்பு படையினரின் வசம் இருந்தது.
2015ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசின் துரித நடவடிக்கைகளின் பிரகாரம் தற்போது வரை சுமார் மூவாயிரத்து இருநூறு ஏக்கர் நிலப்பரப்பு ஐந்து கட்டங்களாக விடுவிக்கப்பட்டு இப்பகுதிகளில் பாரிய மீள்குடியேற்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதன் அடுத்த கட்டமாக கடந்த 13ம் திகதி மேலதிகமாக வலி வடக்கில் படையினர் வசமிருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டு அப்பகுதிகளிலும் மீள்குயேற்றப்பணிகள் தற்போது ஆரம்பிக்ப்படடுள்ளது.
இந்த விடுவிப்பின்படி மயிலிட்டி–கட்டுவன் வீதிக்கு மேற்குப்புறமாகவுள்ள ஜே-240, 246 மற்றும் ஜே-247 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிற்குட்பட்ட தென்மயிலை, மயிலிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அச்சுவேலி ஆராலி வீதியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மத ஸ்தலங்கள் இப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மயிலிட்டி தெற்கு ஞனோதயா வித்தியாலயமும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அண்மையில் விடுவிக்கப்பட்ட இந்த 683 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குயேறவென யாழ் மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 350 குடும்பங்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரத்தி இருநூறிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தயாராகி வருகின்றனர்.
28 வருடங்களின் பின்னர் தமது சொந்த நிலங்களை சென்று பார்வையிட்டு வரும் இப்பகுதி மக்கள் தமது மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட தரப்பினரை கோரி வருகின்றனர்.தற்போது மீள்குடியேறியுள்ள மக்களுக்கு தேவையான முதற்கட்ட பணிகளை முன்னெடுக்க வலிகாமம் வடக்கு பிரதே சசபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தலைமையில் விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டு காடுகள் மற்றும் பாழடைந்த வீதிகளை துப்பரவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.(15)


0 Comments