Advertisement

Responsive Advertisement

ரிஷாத், சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.டி.பியினரை வெளியேற தேர்தல் ஆணையாளர் உத்தரவு!

வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஆகியோர் உடனடியாக அவற்றை மாவட்ட செயலகத்திடம் கையளிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
  
கட்சிச் செயலர்கள், பொலிஸார், தேர்தல் ஆணைக்குழுவினர் இடையிலான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகளை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.டி.பியினர் மிக நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ளார்கள். இந்தக் கட்டடங்களுக்கு இதுவரையில் இவர்கள் வாடகை செலுத்தவில்லை என தேர்தல் முறைப்பாடாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, "சம்பந்தப்பட்ட தரப்பினர் மாவட்ட செயலகத்திடம் இவற்றை உடனடியாக மீள ஒப்படைக்க வேண்டும்" என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலை நடத்துவதற்கு சகல தரப்பினதும் ஒத்துழைப்பை தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார். வட்டாரத்தில் வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பது பொதுமக்களின் பொறுப்பு என்றும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவரொட்டிகள், பதாதைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வட்டாரக் கட்சிப் பணிமனையில் மாத்திரமே பதாதை வைக்க முடியும். பொதுக் கூட்டங்களில் சுவரொட்டியும் பதாதைகளும் காட்சிப்படுத்த முடியும். தேசியக் கொடியையும், மதக் கொடிகளையும் தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்த முடியாது.வட்டாரத்தில் கட்சியொன்று ஒரு பணிமனையே திறக்க முடியும். வீட்டுக் கடன் உட்பட அரச உதவிகள் வழங்குவது நிறுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments