உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்தி வைக்க முயற்சித்தால் யாரும் எதிர்பார்க்காத தரப்பினருடன் சேர்ந்து முயற்சிகளை தோற்கடிக்க நேரிடுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களை காலம் தாழ்த்த மேற்கொள்ளப்படும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும் , அவ்வாறில்லாவிட்டால் இணக்கப்பாடு ஏற்படுத்த முடியாத தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்தாவது இந்த முயற்சிகளை தோற்கடிக்கப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் உள்ளிட்ட விடயதானங்களுக்கான வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி ஆசனத்தில் அமர்ந்த பின்னர் கிடைத்த மக்கள் ஆணையை மறப்பது தான் இதுவரை காலமும் நடந்தேறியிருப்பதாகவும் அதேபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் 2 வருடங்களிலேயே தமக்கு கிடைத்த மக்கள் ஆணையை மறந்துவிட்டரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில், நவம்பர் மாதம் 22 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி வர்த்தமானிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படவில்லையென்றால் அரசியல் போக்கு வேறு பக்கமாக திசை திரும்பும் என்பதை ஜனாதிபதியும் அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேநேரம், மேற்படி வழக்கில் பிரதிவாதியாக அமைச்சர் பைசர் முஸ்தபாவும் அவரது அமைச்சின் செயலாளருமே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் என இருதரப்பிலும் பைசர் முஸ்தபாவின் கனிஷ்ட சட்டத்தரணிகளே ஆஜராவதாகவும் இது முஸ்தபா எதிர் முஸ்தபா வழக்காகவே அமைந்திருக்கும் நிலையில், அதை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜே.வி.பி. தலைவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


0 Comments