|
பாராளுமன்றத்தில் நேற்று வரவு–செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தினை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் முற்பகல் 10.17 மணிக்கு ஆரம்பித்தார்.
|
வரவு செலவுத்திட்டம் குறித்து சிறு குறிப்புரையொன்றை ஆற்றிவிட்டு பொருளாதார மேம்பாட்டிற்கு அரசியல் தீர்வு காணப்படுவது மிகவும் அவசியமானது. அதற்கான முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு செயற்பாட்டினை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்றவாறு தொடர்ந்தவர் இதனை குழப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அணியினரும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதோடு இந்த நாட்டின் தேசியப்பிரச்சினை தொடர்பில் மகிந்த ராஜபக்ஷ கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாடுகள் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை உரிய சான்றுகளுடன் குறிப்பிட்டு மிகக் கடுமையாக விமர்சித்தவாறு தனது உரையைத் தொடர்ந்தவண்ணமிருந்தார்.
இந்த சமயத்தில் முற்பகல் 10.55இக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவருடன் சில அவரது அணி உறுப்பினர்களும் சபைக்குள் பிரவேசித்தனர். இந்நிலையில் சபைக்குள் பிரவேசித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு அருகாமையிலேயே அடுத்த நிரலில் ஒதுக்கப்பட்டிருக்கும் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
மகிந்த ராஜபக்ஷ சபைக்குள் வந்துவிட்டதை அறிந்த கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் சபைக்குள் பிரவேசித்தனர். அவ்வாறான நிலையில் தனது உரையை தொடர்ந்து கொண்டிருந்த சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனியாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை ஆரம்பித்தமை, மகிந்த ராஜபக்ஷவுக்கும் தனக்கும் உள்ள நீண்ட பலமான உறவு என்பன தொடர்பில் கருத்துக்களை கூறியதோடு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினை எதிர்ப்பதற்கான காரணம்? , அதிகாரப்பகிர்வினை விரும்பாது இனங்களுக்குள் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றமைக்கான காரணம்? உள்ளிட்ட பல கேள்விகளை தொடுக்கலானார்.
சம்பந்தனின் உரையை புன்னகையுடன் தனது தாடையில் கைவைத்தவாறே மகிந்த ராஜபக்ஷ பார்த்துக்கொண்டிருந்தார். சம்பந்தன் மகிந்த ராஜபக்ஷவை பார்த்தவாறு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு நீங்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். அது உங்களின் கடமை. அரசியல் செய்யுங்கள் வெற்றிபெறுங்கள் அதுவேறு. ஆனால் அந்த விடயத்தினை அதற்காக பயன்டுத்தாதீர்கள் என்றெல்லாம் கருத்துக்களை முன்வைத்தார். இவை எவற்றுக்கும் எந்தவொரு கருத்துக்களையும் முன்வைக்காது அமைதியாக முகமலர்ச்சியுடன் சம்பந்தனை பார்த்தவாறிருந்தார் மகிந்த ராஜபக்ஷ. இதன்போது இடையிடையே லெஹான் ரத்வத்த உட்பட சில உறுப்பினர்கள் அவ்வவ்போது கருத்துக்களை முன்வைக்க முனைந்தபோதும் அச்சந்தர்ப்பங்களில் தனது கையை காட்டி அமைதியாக இருங்கள் என்று மகிந்த அறிவுரை வழங்கியவாறு இருந்தார்.
இதன் பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் மீதான தனது உரையைத் ஆரம்பித்த மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித்தலைவர், சம்பந்தன் உணர்வுபூர்வமாக பேசினார். அவருடைய உணர்வு எனக்கு புரிகின்றது என்று கூறிவிட்டு தனது வரவு செலவுத்திட்ட உரையைத் தொடர்கின்றேன் என்று கூறியவாறு தனது நீண்ட உரையை தொடந்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் மகிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதுதொடர்பிலான கருத்துக்களை வெளியிடாது தனது வரவு செலவுத்திட்ட உரை நிறைவடைந்ததும் அமைதியாக சற்று நேரம் ஆசனத்தில் அமர்ந்திருந்து விட்டு எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து செல்ல அவர் பின்னலேயே சபையை விட்டு வெளியேறிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|


0 Comments