Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பதுளையில் இன்று அனர்த்த ஒத்திகை

பதுளை மாவட்டத்தில், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில், அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை, இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4 மணிவரையிலும் 67 கிராமசேகவர் பிரிவுகளிலும் இந்த ஒத்திகை இடம்பெறும்.
இந்த ஒத்திகை தொடர்பில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பில் தெரிவிக்கையில்,   மீகஹகீவுல, கந்தகெட்டிய, சொரணாதொட, லுணுகல, வெலிமட, எல்ல, மஹியங்கனை, பதுளை, பசறை, ஹாலிஎல, பண்டாரவளை, ஊவாபரணகம, ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே, இந்த ஒத்திகை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒத்திகைகள், மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் தொடர்புடையதாக இருக்கும் என்பதுடன், முழுமையான அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில், தாக்கத்தைச் செலுத்தவிருக்கின்ற, வானிலையை கவனத்தில் கொண்டே, இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படவிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒத்திகையின் பிரதான நிகழ்வு, பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறியின் தலைமையில், பதுளை செயலகத்தில் இடம்பெறும். ஒத்திகையின் போது, விசேடமாக மண்சரிவு குறித்து, கூடுதல் விளிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதுமட்டுமன்றி, மஹியங்கனை உல்ஹிட்ட வாவிக்கு அண்மையிலும், பதுலுஓயாவுக்கு அண்மையிலும் ஏற்படும், வௌ்ள அனர்த்தம் தொடர்பிலும் விளிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்காலத்தில் மோசமான வானிலையே எதிர்பார்க்கப்படுகின்றது. அக்காலப்பகுதியில், மணித்தியாலயத்துக்குள் 75 மில்லிமீற்றர் மழையும், 24 மணிநேரத்தில், 150 மில்லிமீற்றர் மழையும் பெய்யுமாயின், அப்பிரதேசங்களிலிருந்து, இடம்பெயர்ந்து பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி இடம்பெயருமாறும் அறிவுறுத்தப்படவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் மட்டும், 250கிராம சேவகர் பிரிவுகளுக்கு, மழைமானி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments