Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மக்களின் அடையாளம்,சுயமரியாதையை உறுதிப்படுத்தும் நியாயமான அரசியலமைப்பே தேவை! - சம்பந்தன்

தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையிலான அரசியலமைப்பே உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் தற்பொழுது ஈடுபட்டுள்ள அவசரமான மற்றும் அவசியமான செயற்பாடு குறித்து சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் சார்பில் நாட்டின் உயர்ந்த சட்டமான அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்தினுள் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இது அமையவேண்டும்.
இந்த அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளின் வெற்றியானது, சகலராலும் நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நிலையான தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதிலேயே தங்கியுள்ளது. ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் சுதந்திரமாக ஒப்புதலுடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். எமது நாடு பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடாகும். பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஜனநாயகம் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இரண்டு பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமைத்திருக்கும் அதேநேரம், ஏனைய கட்சிகள் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
இரு கட்சி கருத்தொருமைப்பாட்டுடன் எந்தவொரு அரசியலமைப்பும் தயாரிக்கப்பட முடியாது. குறிப்பாக தமிழ் மக்களின் கருத்துக்களும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளக்கூடிய அபிப்பிராயங்கள் அரசியலமைப்புக்கான அடிப்படையை வழங்க வேண்டும்.
அரசியல் சூழல் நிறைந்த எல்லைக்கு அப்பாலிருந்து அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம், இலங்கை தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய குணாம்சங்களைக் கொண்டதாக அரசியலமைப்பு அமையவேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் இதனை அடைய முடியாமல் போயுள்ளது. 1987-88 காலப் பகுதியில் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வதற்காக முதன் முதலில் 13ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனினும், அதனுடன் தொடர்புபட்ட சில அரசியலமைப்பின் சரத்துக்களால் அது வலுவிழந்தது.
அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண பல மேம்படுத்தப்பட்ட யோசனைகளை முன்வைத்திருந்தன. ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழு பரிந்துரைகள், சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் 2000 அரசியலமைப்பு முன்மொழிவுகள் அமைச்சரவை அனுமதியுடன் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது, மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் பல்லின நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதுடன், திஸ்ஸ வித்தாரன தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பன அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பல விடயங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அரசியலமைப்பில் இணைக்கப்படவில்லை. எனினும் அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது முற்று முழுதாக மாறுபட்ட சூழலில் முன்னெடுக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.
தமது அடையாளம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில், நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஏற்பாடொன்றே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இலக்காக உள்ளது. உலகில் இதற்காக பல ஏற்பாடுகள் இருக்கின்றன. தீர்மானம் இல்லாத விளைவுகளால் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன. சிறந்த கல்வியறிவைப் பெற்றுள்ள தமிழ், சிங்களவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். சர்வதேச ரீதியில் நாடு தொடர்பில் காணப்பட்ட நன்மதிப்பு சிதைந்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ள நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை ஏற்படுத்த, புதிய உயர் சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Post a Comment

0 Comments