இலங்கை விமானப்படையின் 66 ஆவது ஆண்டை முன்னிட்டும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாகவும் வவுனியா கூட்டுப் படைத் தலைமையகத்தில் விமானப்படையின் கண்காட்சியும், சாகச நிகழ்வும் நடைபெற்று வருகின்றது.
இந்த கண்காட்சியினை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஐயம்பதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் விமானப்படைத் தளபதி வரவேற்கப்பட்டதுடன், கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகளையும், விமானப் படை வீரர்களின் சாகசங்களையும் பார்வையிட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை 3 தினங்கள் இக் கண்காட்சியும் சாகசமும் நடைபெறவுள்ளது. இதில் விமானப்படை வீரர்கள் பருசூட்டில் இருந்து குதித்தல், தீ அணைத்தல், விமானத்தின் பகுதிகளை காட்சிப்படுத்தல், விமான இயக்கம் பற்றி வெளிப்படுத்தல், விமானங்களின் சாகசப் பறப்புக்கள், விமானப்படை வீரர்களுடன் இணைந்து நாய்களின் சாகசங்கள் என விமானப்படையுடன் தொடர்புடைய பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் விமானப்படை உயர் அதிகாரிகள், பொலிசார், விமானப்படை வீரர்களின் குடும்பங்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






0 Comments