மண்ணின் விடுதலைக்காக தங்களது உயிர்த்தியாகங்களை செய்தவர்களை மறக்கமுடியாது என கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண மீன்பிடித்திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மகிழவெட்டுவான் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வானது நேற்று மீனவர் சங்கத்தலைவர் த.சரவணமுத்து தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டிருந்ததுடன் கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் சுதாகரன் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்அணித்தலைவர் சேயோன் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அவர்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திக்கு என்றைக்குமே எதிரானவர்கள் அல்ல. மாறாக எமது முதலாவது தெரிவு இந்த மண்ணுக்காக மண்ணின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகங்களை செய்தவர்களை மறக்கமுடியாது.
அதற்காகவே நாங்கள் மக்களுடைய நிரந்தரத்தீர்வு விடையத்திற்கு என்றைக்குமே முன்னுரிமை கொடுத்து எங்களது அரசியல் பயணத்தினை முன்னகர்த்தி வருகின்றோம்.
அவ்வாறான தமிழ் மக்களது உரிமைகளுடன் கூடிய நிரந்தரத் தீர்வினை விரும்பாத சிலர் குறிப்பாக ஏனைய கட்சிகளில் உள்ளவர்கள் த.தே.கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்று பொய்யான விசமத்தனங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்கள்.
ஆனால் தமிழ்த் தேசிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எங்களது நீண்ட நாள் இலக்கினை முன்னுரிமைப்படுத்துவதுடன் எமது மக்களுக்கான அபிவிருத்தியினையும் மையப்படுத்தியே எங்களது நகர்வுகள் அமைகின்றது.
கிழக்கு மாகாண சபையனை எடுத்துக்கொண்டால் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.
அந்த ஐந்து அமைச்சர்களில் எமது தமிழ் அமைச்சர்கள் இருவரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறக்கூடிய விதத்தில் சம அளவான வளப்பங்கீட்டை மேற்கொண்டு தங்களது அமைச்சுக்களை செவ்வனே நடத்தி வருகின்றார்கள்.
ஆனால் ஏனைய அமைச்சர்களை பொறுத்தவரையில் அதுவும் குறிப்பாக சுகாதார அமைச்சை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான பாரிய திட்டங்கள் எதனையும் பெரிதாக செய்யவில்லை. பத்து வருடங்களாக எந்தவிதமான வைத்தியசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் தரமுயர்த்தப்படவில்லை.
ஆனால் அண்மையில் திருக்கோயில் வைத்தியசாலை மாத்திரமே தரமுயர்த்தப்பட்டது. வேறு எந்த வைத்தியசாலைகளும் தரமுயர்த்தப்படவில்லை என்பதுடன் வளப்பகிர்வும் சிறப்பான முறையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸ்சும் இணைந்து ஆட்சி அமைத்திருக்கின்றது என்று படித்தவர்களும், பாமர மக்களும் கருத்துக் கூறுகின்றார்கள்.
கிழக்கு மாகாணசபையில் இந்த இரண்டு கட்சிகளும் ஒரு பகுதிதான் அங்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துதான் கலப்பு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றது என்பதனையும் சற்று உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதற்கு மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் நலன் சார்ந்த விடயங்கள் அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள் என்று எமக்கு எதிரான சக்திகள் மக்கள் மத்தியில் அப்பட்டமான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனை தமிழ் மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உணர்வு பூர்வமாக சிந்தித்து செயற்படவேண்டும்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தினை கொண்டுவந்தவுடன் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி மாற்றம் வருவதற்கான பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. அதன்போது த.தே.கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை இனியாவது செய்யக்கூடாது.
அவ்வாறு ஆட்சியில் இணைவதன் மூலம்தான் தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியடையும், அதனை அடிப்படையாகக்கொண்டு நீங்களும் ஆட்சியின் பங்காளியாக மாறுங்கள் என்று பல கல்விமான்களிடமும், பல துறைசார்ந்த அதிகாரிகளிடமும், தேசிய பற்றாளர்களிடமும், பொது மக்களிடமும் இருந்து எம்மை நோக்கி பல அழுத்தங்கள் வந்தது.
அதன் காரணமாக நாங்கள் அனைவரும் ஒன்று கூடி கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப்பொறுப்புக்களை எடுத்து கிழக்கு மாகாணசபை ஆட்சியில் பங்காளிகளாக மாறினோம்.
எதிர்காலத்தில் எமது சமூகத்திற்குள் ஏனைய சமூகத்தினை இணைத்து அவர்களுக்கு எமது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்து அவர்களது பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்கச்செய்ய எமது சகோதரர்கள் உங்களை நாடி வருவார்கள்.
அவர்களது விடயத்தில் தமிழ் மக்களாகிய நீங்கள் மிகவும் அவதானமாக இருந்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படும் பட்சத்திலேதான் நாங்கள் நீண்ட காலமாக போராடிவரும் போராட்டத்திற்கான இலக்கினை சரியானமுறையில் அடையமுடியும்.
இந்தப் பிரதேசத்தினை பொறுத்தவரையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சினூடக பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. தற்போதும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மக்களை வந்தடைகின்றபோது அந்த அந்த பிரதேசங்களில் உள்ள எமது மக்கள் அந்த விடயத்தில் அக்கறையாக இருந்து செயற்படவேண்டும்.
அவ்வாறு செயற்படும் போதுதான் அதற்குப்பின்னரும் வரும் அபிவிருத்திகள் உரியவர்களுக்கு உரிய முறையில் கிடைக்கும் என்பதனையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
0 Comments