தண்டனையில் இருந்து தப்பும் கலாசாரம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு இனி இடமளிக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சம்பந்தன் எம்.பி. இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. நான் அந்த கருத்துடன் ஒத்துப்போகவில்லை. யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புகளான அரச படைகள் மற்றும் ஆயுத போராளி குழுவான விடுதலைபுலிகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விடயங்களையே இந்த தீர்மானம் கையாள்கிறது. இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கிடையாது. இது இருதரப்புகளினாலும் இழைக்கப்பட்ட குறித்த சில செயற்பாடுகள் பற்றிய தீர்மானமாகும். அனைத்து செயற்பாடுகளும் பற்றியதுமல்ல.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ அளித்த உறுதிமொழியின் பின்னரே இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் மகிந்த ராஜபக்~ தெளிவான உறுதிமொழியை இதன்போது வழங்கியிருந்தார்.
இதேநேரம், நாட்டின் தென்பகுதிகளில் சிங்கள இளைஞர்கள் மற்றும் மக்கள் ஆயிரங்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்ற போது 1980 களின் இறுதி காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் அங்கத்தின் தலையீட்டை கோரி மகிந்த ராஜபக்~ ஜெனீவா சென்றிருந்தா. தாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே அவர் அதை செய்திருந்தார்.
எனினும், 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதற்கான ஒரே வித்தியாசம் அதைப் போன்ற சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றிருந்தன என்பது தான். யாரும் இராணுவ வீரர்கள் சார்பில் முறையிட்டிருக்கவில்லை. 88 மற்றும் 89 களில் மகிந்த ராஜபக்~ ஜெனீவா சென்றிருந்த போது இராணுவ வீரர்கள் சார்பில் அவர் முறையிட்டிருக்கவில்லை. பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலேயே அவர் முறையிட்டிருந்தார். பொது மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் செயற்படுகிறது.
அதற்கு சமாந்தரமாக ஆயுத படையினர் இழைத்த மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் பொதுமக்கள் பற்றிய கரிசணை கொண்டுள்ளன.
ஆகவே, தண்டனையில் இருந்து தப்பும் இந்த கலாசாரம் நீடிக்கக்கூடாது. அது முடிவுக்கு வர வேண்டும். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களில் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த ஆயுத போராளிகளுக்கு எதிராக அரசினால் எடுக்கப்பட்ட முறையான நடவடிக்கைகளுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இந்த இரு நிலைமைகளுக்கும் இடையிலான வித்தியாசம் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், இந்த விவாதத்தின் ஆரம்பத்தில் யுத்த வீரர்கள் பற்றி பேசப்பட்டது. எனினும், அனைத்து யுத்த வீரர்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி செயற்ப்பட்டனர் என்று நான் கருதவில்லை. எனினும், அவர்களில் சிலர் சந்தேகத்துக்கு இடமின்றி அந்த சட்டங்களுக்கு எதிராக குற்றங்களை இழைத்துள்ளனர்.
ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் என்னெலிகொட தொடர்பான வழக்குகள் மற்றும் திருகோணமலை 5 மாணவர்கள் மற்றும் மூதூரில் 17 தொண்டர் பணியாளர்கள் படுகொலைகள் போன்ற விடயங்களை அதில் ஆயுத படையினர் அல்லது யுத்த வீரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதற்காக மூடி மறைக்க முடியுமா? இந்த சம்பவங்களில் யுத்த வீரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்ற ஒரே காரணத்திற்காக இவற்றை மூடி மறைக்க முடியாது.
மனித குலத்துக்கு எதிராக 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களை எப்படி மூடி மறைக்க முடியும்?
உயர்பதவிகளை வகிக்கும் நபர்களின் அரசியல் நிகழ்ச்சிநிரல் பெருக்கிக் கொள்வதில் முறையான கடமையை நிறைவேற்றுவதில் அரசாங்கமொன்றுக்கு இருக்கும் பொறுப்பையும் நிராயுதபாணியான பொதுக்கள் கொலைகளையும் யாரும் குழப்பிக் கொள்ள இடமளிக்கக்கூடாது.
1988 மற்றும் 1989களில் தெற்கில் இடம்பெற்ற சம்பவங்களும் சரி 2008 மற்றும் 2009 களில் வடக்கிலும் இடம்பெற்றவை மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகும். எந்தவொரு நாடும் அவ்வாறான குற்றங்களை அலட்சியம் செய்யாது. என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments