Home » » வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தாயைத் தேடும் சிறுமி!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தாயைத் தேடும் சிறுமி!

முல்லைத்தீவு மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், நேற்று 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த நிலையிலும், மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுமியொருவர், வவுனியாவில் கடைக்கு வேலைக்குச் சென்றவேளை காணாமல் போன தனது தாய் எங்கேயென, தன்னுடைய தாயின் படத்தைக் காண்பித்து கேள்வியெழுப்பினார்.
கடந்த 2009ஆம் ஆண்டு, யுத்தம் முடிவடைந்து வவுனியா செட்டிகுளம், வலயம்-04 முகாமில், வாழ்ந்தபோது அத்தாய், தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் வாழவைப்பதற்காக, வவுனியா கச்சேரியில் உள்ள, சிற்றுண்டிச்சாலைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதியன்று, வேலைமுடித்து வீடு திரும்பியவர், இன்றுவரை வீட்டுக்கு வரவேயில்லை என்றும் அந்தச் சிறுமி தெரிவித்தார்.
இதேவேளை, தனது மகள் காணாமல் போனதிலிருந்து இன்று வரை அவருடைய பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெரிதும் பாடுபடுவதாகவும் கச்சான் விற்றே, பிள்ளைகளை வாழ வைப்பதாகவும், தெரிவித்துள்ள காணாமல் போயுள்ள பெண்ணின் தாய், தனக்கும் 66 வயதாகிவிட்டதாகவும் தன்னால் உழைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் எனவே, தனது மகளை விரைவில் தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |