வடமாகாண முதலமைச்சருக்கு மனம் உளைச்சலை ஏற்படுத்தும்படி நாங்கள் செயற்பட்டிருந்தால் அவரிடம் மன்னிப்புக் கோருவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். வடமாகாண சபையின் முன்பாக நேற்றுமுன்தினம் வேலையற்ற பட்டதாரிகள், வடமாகாண முதலமைச்சரைச் சபை வளாகத்திற்குள் செல்ல விடாது தடுத்து நிறுத்திப் போராட்டம் மேற்கொண்டனர்.
|
இதன் போது வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாதவாறு திரும்பிச் செல்ல வேண்டி ஏற்பட்டது. இதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தன்னுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது பட்டதாரிகள் தன்னுடன் அதட்டலான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக 73 ஆவது நாளாகவும் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் வேலையற்ற பட்டதாரிகள் கருத்து வெளியிடுகையில், வடமாகாண முதலமைச்சருடன் வடமாகாண சபைக்கு முன்பாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாம் அதட்டலான முறையில் வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எங்களுக்கு முதலமைச்சர் மீது தனிப்பட்ட கோபமோ அல்லது பகையோ இல்லை. நாங்கள் எமது பிரச்சினைக்கான தீர்வைத் தான் அவரிடம் எதிர்பார்த்தோம்.
இந்தக் கலந்துரையாடலின் போது அவரது மனம் உளைச்சலுக்குள்ளாகும் படி நாங்கள் செயற்பட்டிருந்தால் அவரிடம் மன்னிப்புக் கோருகின்றோம் என வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
|
0 Comments