அதிக மழையுடனான காலநிலை காரணமாக களனி, களு, கிங் கங்கைகளின் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த ஆற்றங்கரைகளுக்கு தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக செயற்படும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
களனி கங்கையின் க்ளேன் கோஸ் பிரதேசத்திலும், களு கங்கையின் ரத்தினபுரி பிரதேசத்திலும், கிங் கங்கையின் பத்தேகம பிரதேசத்திலும் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளதாக அ.மு.ம.நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பிரதான பாதைகள் தொடர்பாக மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மற்றும் ரத்தினபுரி மாவட்ட மக்கள் மண்சரிவு தொடர்பாக எச்சரிக்கையாக செயற்படுமாறும், அவ்வாறான அவசர நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
மரங்கள் சரிந்து வீழ்தல், கற்பாறைகள் உருண்டு வீழ்தல், நிலம் வெடிப்பு, மண்சரிவுக்கான அறிகுறிகள் போன்றவை தென்பட்டால் அந்த பிரதேசங்களில் இருந்து விலகிச் செல்லுமாறு உதவி பணிப்பாளர் கொடிப்பிலி கோரியுள்ளார்.
0 comments: