மட்டக்களப்பு மயிலம்பாவெளி கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் இணைந்து நடாத்திய சாதனையாளர்களை கௌரவிற்கும் நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு மா.விஸ்வநாதன் தலைமையில் மயிலம்பாவெளி விக்கினேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் நேற்று(28) நடைபெற்றது.
தேசிய கீதம் மற்றும் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாடசாலை மட்டங்களில் தரம் ஐந்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்கள், சாதாரண தரம், உயர் தரம், பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்கள் என பலர் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் பாடசாலை அதிபர், கிராம அபிவிருத்திச் சங்க முன்னாள் தலைவர், ஆசிரியர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவினால் கௌரவிக்கப்பட்டனர்.
நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கலந்துகொண்டிருந்தார்.
அத்துடன் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், செங்கலடி பிரதேச செயலாளர் க.பேரின்பராசா, வாகரை வடக்கு கோறளைப் பற்றுப் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் இ.கங்காதரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments