தனியார் நிறுவனமொன்றுக்கு வரிச் சலுகை கோரும் வகையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தால் அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
வாகன உதிர்ப் பாகங்களை இறக்குமதி செய்து உள்நாட்டில் அதைப் பொறுத்துவதற்காக வாகன இறக்குமதியாளர் ஒருவருக்கு சலுகைகளை வழங்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கு எதிராக அமைச்சரவைப் பத்திரமொன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டில் வாகனங்களைப் பொறுத்தும் பணிகளுக்காக வெய்க்கல் லங்கா என்ற தனியார் நிறுவனமொன்றுக்கு 70 வீத வரிச் சலுகையைக் கோரும் அமைச்சரவைப் பத்திரமொன்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் கடந்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டக் கூடாது என அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, குறித்த இறக்குமதியாளர் சுங்க விதிகளை ஏற்கனவே மீறியுள்ளார் என்று சுட்டிக்காட்டி அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த ஆட்சியின்போது அரசியல் அழுத்தங்களின் காரணமாக குறித்த நிறுவனத்துக்கு எதிரான விசாரணைகள் முடக்கிவிடப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 வாகனங்களுக்கே இந்தச் சலுகை கோரப்படுவதாக நிதி அமைச்சர் இதன்போது விளக்கமளித்ததாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய எட்டு கொள்கலன்களை விடுவிக்குமாறு நிதி அமைச்சால் சுங்கத் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதாக கடந்த வாரம் குறித்த ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது.
இனிடையே, மினுவங்கொடை பகுதியில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட 54 வாகனங்களின் உதிரிப்பாகங்களை கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவை மோட்டார் வாகன சட்டத்தை மீறும் வகையிலானவை என சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
0 Comments