Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சகல இனங்களும் சுமுகமாக சுதந்திரமாக வாழவேண்டுமாகவிருந்தால் அரசியல்வாதிகள் சற்று சிந்தித்து செயற்படவேண்டும்

கிழக்கு மாகாணத்தில் சகல இனங்களும் சுமுகமாக சுதந்திரமாக வாழவேண்டுமாகவிருந்தால் அரசியல்வாதிகள் சற்று சிந்தித்து செயற்படவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் மீதான நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தின்போது உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கல்வி அமைச்சு மீதான இந்த விவாதத்தில் நான் கலந்துகொள்வதில் மகிழ்வடைகின்றேன்.இங்க தெரிவிக்கப்பட்ட கருத்துகளில் சிலவற்றில் நான் முரண்படாதவன் என்ற அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் துரைரெட்னம் அமைச்சரையும் அமைச்சின் அதிகாரிகளையும் புகழ்ந்துபேசியது மட்டுமன்றி கல்வி அமைச்சர் அரசியல்சாயம் இல்லாத அமைச்சராகவுள்ளார்,அவரது நடைமுறைகள் வரவேற்கத்தக்கது என சுட்டிக்காட்டியிருந்தார்.அதில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை.
எனது பார்வையில் அரசியல்பாகுபாடு பாரபட்சம் என்பது வேறு,ஒரு அமைச்சராக இருந்துகொண்டு அரசியல் ரீதியாக செயற்படாமல் இருப்பதுவேறு.இந்த சபையில் உள்ள உறுப்பனர்களாக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி,முதலமைச்சராக இருந்தாலும் எந்தவிதமான அரசியல்பாரபட்சமும் எந்த அதிகாரிகளையும் அரசியல்பழிவாங்களுக்குள் உட்படுத்துவதை விரும்பாதவர்களாகவே நாங்கள் இருக்கின்றோம்.
அரசியல் ரீதியாக தெரிவுசெய்யப்பட்டு இந்த சபையினை அலங்கரித்துக்கொண்டுள்ள நாங்கள் அரசியல் ரீதியாக அதிகாரிகள் விடும் பிழைகளை தவறுகளை தட்டிக்கேட்காமல் அவர்கள் செல்லும் பாதை பிழையாக இருந்தால் அதனை திருத்திக்கொள்ளாமல் நாங்கள் இருப்போமானால் இந்த சபை தேவையில்லையென நான் கருதுகின்றேன்.
அரசியல் இல்லாமல் அமைச்சர்கள் இருக்கவேண்டுமானால் கிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரைக்குமு; அரசியல் இல்லாதசபைபோன்று இயங்கியிருக்கலாம்.நாங்கள் அரசியல்வாதிகள் அதிகாரிகள் தவறுகள் விடும்போது அவர்களை நேர்பாதையில்கொண்டுசெல்லவேண்டிய கட்டாய தேவை எங்களுக்கு உள்ளது.
அதேபோன்று இங்கு மாகாணசபை உறுப்பினர் துரைரெட்னம் கட்டிடங்களுக்கு பெயர் சூட்டுவது தொடர்பில் கூறியிருந்தார்.அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். கட்டிடங்களுக்கு பெயர்கள் தேவையில்லை.ஏற்கனவேயுள்ள பெயர்களை அகற்றவேண்டும் என்று கூறியிருந்தார்கள்.நிச்சயமாக அதனைச்செய்யவேண்டும்.
ஒரு அரசியல்வாதி அதிகாரத்தில் இருக்கும்போது அரச நிதியைக்கொண்டுவந்து கட்டிடத்தினை கட்டிவிட்டு அதற்கு தனது பெயரைச்சூட்டுவது என்பது மிகவும் பிழையான காரியமாகும்.தனது சொந்த நிலையில் ஒரு கட்டிடத்தினைக்கட்டி அதற்க தனது பெயரை சூட்டும்போது அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.ஏற்கனவே பாடசாலை கட்டிடங்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்களை நீக்குவதற்கான நடவடிக்கையினை கல்வி அமைச்சர் மேற்கொள்ளவேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
இனவிகிதாசார அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் நடைபெறவேண்டும்,இனவிகிதாசா அடிப்படையில் பாடசாலைகள் அமைக்கப்படவேண்டும் என இங்கு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.மூன்று இனங்களும் வாழும் கிழக்கு மாகாணசபையில் எவ்வளவு காலத்திற்கு இனவிதாசார ரீதியில் பாடசாலை அமைப்பதும் ஆசிரியர்களும் நியமிப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த மாகாணத்தில் சகல இனங்களும் சுமுகமாக சுதந்திரமாக வாழவேண்டுமாகவிருந்தால் அரசியல்வாதிகள் சற்று சிந்தித்து செயற்படவேண்டும்.மக்களின் தலைவர்களாக இந்த சபையினை அலங்கரிக்கும்ந hங்கள் கூட இனங்களுக்கிடையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை எதிர்காலத்தில் தீர்த்துவைக்ககூடியளவுக்கு சிந்திக்காவிட்டால் அடிமட்ட மக்கள் எந்தளவுக்கு சிந்திப்பார்கள் என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டும்.
இங்கு உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார் கிழக்கில் தமிழ் மாணவர்களை விட முஸ்லிம் மாணவர்கள் அதிகமாகவுள்ள நிலையில் தமிழ் மாணவர்களுக்கான பாடசாலைகள் அதிகளவில் உள்ளதாகவும் முஸ்லிம் மாணவர்களுக்கு குறைந்தளவிலேயே பாடசாலை உள்ளதாகவும்.
பட்டிருப்பு வலயத்தினை எடுத்துக்கொண்டால் இரண்டு கோட்டங்கள் உள்ளன. மண்முனை தென் ஏருவில் பற்று கோட்டத்தில் அதிகளவான மக்கள் வாழ்கின்றனர்.குறைந்தளவிலான பாடசாலைகள் உள்ளது.போரதீவுப்பற்று கோட்டத்தினை எடுத்துக்கொண்டால் பெரிய பிரதேசமாகவுள்ளபோதிலும் குறைந்தளவு மக்களே அங்கு வாழ்கின்றனர்.குறைந்தளவு மாணவர்களே உள்ளனர்.அந்த நிலையே கிழக்கு மாகாணத்தில் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் மூன்று பகுதிகளிலேயே முஸ்லிம் மக்கள் நெருக்கமாக வாழ்கின்றனர்.ஓட்டமாவடி,ஏறாவூர்,காத்தான்குடி ஆகிய பகுதிகளிலேயே நெருக்கமாக வாழ்கின்றனர்.வாகரை பிரதேசத்தினையும் ஓட்டமாவடி பிரதேசத்தினையும் எடுத்துக்கொண்டால் ஓட்டமாவடியில் அதிகளவு பாடசாலையினை கட்டுவதற்கு முற்பட்டால் அங்கு பாரிய நெருக்கடியை சந்திக்கும் நிலையேற்படும் என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.மட்டக்களப்பு நகருக்குள் இருக்கும் பாடசாலைகளில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பெறும் நிலையில் புறநகர் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் 150க்கும் குறைவான மாணவர்களே இருக்கும் நிலையும் உள்ளது.இவ்வாறான விடயங்களில் நாங்கள் பொதுவாக சிந்திக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் 4000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கும்போது அவர்களுக்கிடையில் போட்டிப்பரீட்சைகள் நடாத்தாமல் சிரேஸ்ட அடிப்படையில் ஆசிரியர் தொழிலுக்குள் உள்வாங்கப்படவேண்டும்.2013ஆம் ஆண்டியல் இருந்து சுமார் மூன்று வருடங்கள் தொழிலுக்காக காத்துக்கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கும் 2016ஆம்ஆண்டு பட்டதாரிகளாக வெளியேறியவர்களுக்கும் ஒன்றாக போட்டிப்பரீட்சை நடாத்தும்போது 2016ஆம்ஆண்டு பட்டதாரிகளாக வெளியேறியவர் ஆசிரியர் தொழிலுக்குள் உள்வாங்கப்பட்டு 2013ஆம் ஆண்டில் பட்டதாரியாக வெளியேறியவருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்காத நிலையும் ஏற்படும்.அவர் 40வயதை கடக்கும்போது எந்த தொழிலும்பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே ஏற்படும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெறுபவர் உடனடியாக தொழில்வாய்ப்பினைப்பெறும்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெறுபவர்கள் தொழிலுக்கான நீண்டகாலம் காத்திருப்பதானது அவர்களுக்கு செய்யும் அநீயாயமாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கல்வி அடைவு மட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அடைவுமட்டத்தினை அதிகரிக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.
கடந்த கால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் கல்வியை வளர்க்கவேண்டுமானால் திட்டங்களை வகுக்கவேண்டும்.இரண்டு வகையில் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான திட்டத்தினை வகுக்கவேண்டும்.அடுத்த ஐந்து ஆண்டில் அடைவுமட்டத்தினை எந்தளவுக்கு கொண்டுசெல்லப்போகின்றோம் என்ற திட்டத்தினை நாங்கள் தயாரிக்கவேண்டும்.
வடமாகாணசபையில் அதற்கான குழு நியமிக்கப்பட்டு 30இலட்சம் ரூபா பணமும் ஒதுக்கீடுசெய்யப்பட்டு திட்டமிடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் கிழக்கு மாகாணத்திலும் அதற்கான பணத்தினை உடனடியாக ஒதுக்கீடுசெய்து திட்டங்களை வகுக்கவேண்டும்.
கிழக்கு மாகாணசபை சில மாதங்களில் கலைக்கப்பட்டு புதிய ஆட்சி ஏற்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.கலைத்தாலும் கலைக்காவிட்டாலும் இந்த மாகாணத்தில் வாழும் மக்களுக்காக அந்த திட்டம் வகுக்கப்படவேண்டும்.கல்வியில் எமது மக்கள் ஒரு அடைவுமட்டத்தினை அடையவேண்டும்.
கடந்த ஆண்ட கல்விக்காக 1080 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டதாக அறிகின்றேன்.ஆனால் இந்த ஆண்டு 215மில்லியன் மட்டுமே கிடைத்துள்ளது.மத்திய அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்து அதிகளவான நிதியை கொண்டுவரவேண்டும்.
வெறுமனே நாங்கள் கட்டிடங்களை மட்டும் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களின் தொகையானது அதிகரித்துச்செல்கின்றது.கடந்த ஐந்த ஆண்டுகளுக்கு மேல் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கியதாக நாங்கள் அறியவில்லை.கிராமப்புறங்களில் மாணவர்கள் நிலத்தில் இருந்து கற்றுவதும் மர நிழலில் கற்றுவருவதும் தொடர்ந்தவண்ணமுள்ளது.இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.
பிரதம செயலாளரினால் ஒதுக்கீடுசெய்யப்படும் நிதியை கையாளும் திறமை அமைச்சுக்கு இருக்கவேண்டும்.பிரதம செயலாளர் மூலம் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் கல்வி அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களுக்கு இவ்வளவு என அங்கிருந்து சொல்லமுடியாது.எந்த திணைக்களத்திற்கு எவ்வளவு நிதியொதுக்குவது என்பது தொடர்பில் கல்வி அமைச்சரே தீர்மானிக்கவேண்டும்.
புனர்வாழ்வுக்கு எதிர்வரும் ஆண்டுக்கு மூன்று மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.புனர்வாழ்வுசெய்யவேண்டிய பெருமளவான கணவனை இழநத பெண்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 14000க்கும் மேற்பட்ட கணவனை இழந்தவர்கள் உள்ளனர்.போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்தவர்கள் உள்ளனர்.அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்தவேண்டுமானால் புனர்வாழ்வு திணைக்களம் ஊடாக மேற்கொள்ளவேண்டும்.
விளையாடிக்கொண்டுள்ளவர்களை ஊக்கப்படுவத்துவதை விடுத்து புதிதான என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு அங்கு பயிற்சி முகாம்களை நடாத்தி விளையாட்டு வீரர்களை உருவாக்கவேண்டும்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் இரண்டு கோட்டங்கள் உள்ளன.மண்முனை தென் எருவில் பற்று கோட்டம்.இதில் நான்கு 01ஏபி பாடசாலைகள் உள்ளன.ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே ஒரு 01ஏபி பாடசாலை இல்லாத கோட்டமாக போரதீவுப்பற்று கோட்டம் உள்ளது.ஏன் என கல்வி அமைச்சர் சிந்திக்கவேண்டும்.அந்த கோட்டத்தில் 13ஆம் கொலணியில் உள்ள பாடசாலையில் கடந்த ஆண்டு ஒரு மாணவி 09 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளார்.இவ்வாறான சித்திகளைப்பெறும் அப்பகுதியில் ஏன் இதுவரையில் ஒரு 01ஏபி பாடசாலை ஏன் அமைக்கப்படவில்லையென்பதை அமைச்சர் சிந்திக்கவேண்டும்.அது தொடர்பில் அதிகாரிகள் ஏன் செயற்படவில்லையென்பதை ஆராயவேண்டும்.
அரசியல் அதிகாரங்களை இதற்கு பயன்படுத்தாதுவிட்டால் எமது மக்களை மாட்டுமந்தைகள்போன்று வளர்ப்பதற்கு hங்கள் அனுமதிக்ககூடாது.

Post a Comment

0 Comments