Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன்கோயில் நீண்டகாலப் பிரச்சினை தீர்க்கப்பட்டது (முழுமையான விபரம் )

75 வருட வரலாற்றினைக் கொண்ட மேற்படி ஆலயத்தில்இ இவ்வருட  ஆரம்பம் முதல் நடைபெற்றுவருகின்ற பிரச்சினைகளுக்கு ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளர் நிரந்தரமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

2016ம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவு இவ்வருட ஜனவரியில் நடைபெற்றது. ஆலய யாப்பின்படி கிராமத்தில் வசிக்கும் ஒருவரையே தலைவராகத் தெரிவுசெய்ய முடியுமென குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு மாறாக புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். அதுமட்டுமல்ல இவர் பல வருடங்களாக ஆலயத்திற்கோ அல்லது சங்கக் கூட்டத்திற்கோ சமுகம் கொடுக்காதவர். பதவி ஏற்றுக்கொண்ட தலைவர் ஆலய பாரம்பரியங்களையும் மூத்த உறுப்பினர்களையும் மதிக்காமல் எதேச்சியான முடிவுகளை எடுத்து தமது சாகியத்தை முன்னிலைப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டி வந்தார். நிர்வாகத்  தெரிவின்போது தன்னுடன் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட செயலாளரின் பதவியைப் பறித்தார். இச்செயலாளார் ஆலயத்தில் சரியைத் தொண்டில் அர்பணிப்புடன் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் ஒருவராவார். அதுமட்டுமல்ல இதற்கு முன்னர் பல தலைவர்களுடன் திருப்திகரமான முறையில் செயலாளராகப் பணிபுரிந்தவருமாவார். அதனைத் தொடர்ந்து தனது மருமகன் ஒருவரை புதிதாகச் சங்கத்தில் இணைத்து அவருக்கு செயலாளர் பதவியை வழங்கினார். ஆலய யாப்பின்படி பத்துவருட உறுப்புரிமை கொண்ட ஒருவரையே செயலாளராக நியமிக்க முடியும். அத்துடன் பொருளாளராக நியமிக்கப்பட்டவரும் தலைவரின் மற்றொரு மருமகனாகும்.

இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு ஆனி உத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்தை ஆலயத்தின் பெண்கள் சங்கம், மூத்த உறுப்பினர்கள், அர்ப்பணிப்பாளர்கள் ஆகியோரை இணைத்துக்கொள்ளாமல் நடாத்தி முடித்தார். ஆயினும் இவர்கள் யாவரும் ஆலய கும்பாபிஷேகத்திற்கு ஏராளமான நிதி உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேக  பூசைகள் மூத்த உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. கும்பாபிஷேக மலர்க் குழுவில் தானும் தனது சகோதரர்களையும் உள்ளடக்கி அம்மலரில் இடம்பெற்றுள்ள ஆலய வரலாறு தொடர்பான கட்டுரையில் உண்மையை மாற்றி தனது சாகியத்தை முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவரின் இத்தகைய செயற்பாட்டிற்கு தலைவரின் குடும்ப உறவினர்களும் ஆலயத்தின் பாரம்பரியத்தை அறியாத, எக்காலத்திலும் ஆலய வழிபாட்டிற்கு வந்திராத, கிராமத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு சில தீய சக்திகள் துணை நின்றன. இவர்களை கிராம மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக நடந்துவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆலய முன்னயை நிருவாகத்தினர் பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர்,  இந்து கலாசாரத் திணைக்களப் பணிப்பாளருக்கு அவ்வப்போது அறிவித்திருந்தனர். தொடர்ச்சியாக கிராம மக்களும், ஆலய மூத்த உறுப்பினர்களாலும் ம.தெ.எ.பற்று பிரதேச செயலாளருக்கு இப்பிரச்சினைகளுக்குத்  தீர்வுகாணுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக பிரதேச செயலாளர் தனது அலுவலகத்தில் 18.08.2016 ந் திகதி ஒரு கலந்துரையாடலை நடாத்தினார். நிருவாகம் சார்பாக ஐவரும், முறைப்பாட்டாளர் சார்பாக ஐவரும் இதில் கலந்து கொண்டனர். மேலதிகமாக கலாசார உத்தியோகத்தர்கள், கிராமசேவகர் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். நீண்டநேர வாதப்பிரதிவாதங்களின் மத்தியில் ஏகமானதாக பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு ஒப்பமிட்டனர். அதில் மிக முக்கியமானது பறிக்கப்பட்ட செயலாளாரின்  பதவியை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பது என்பதாகும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் ஒரு கூட்டம் ஆலயத்தில் 21.08.2016 ந் திகதி நடாத்தவேண்டும் எனவும்,  அப்போது சகல ஆவனங்களையும் பழைய செயலாளரிடம் ஒப்படைப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது. இதனடிப்படையில் பிரதேச செலாயளரும் அவரதுகுழுவினரும் அன்றைய தினம் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.


இக்கலந்துரையாடலிற்கு தலைவர் தமது குடும்பத்தார் அனைவரையும் வரவழைத்திருந்தார். ஆரம்பத்தில் உரையாற்றிய தலைவர் பிரதேச செயலகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உடன்பட முடியாது என உறுதியாகக் கூறியதுடன் பல வருடங்களுக்கு முன்னர் ஆலயத்தில் நடந்தேறியதாக பல நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்களை வாசித்து கூட்டத்தை வேறு திசையில் கொண்டு சென்றதன் விளைவாக அன்றைய கலந்துரையாடல் சர்சையில் முடிவடைந்தது. பிரதேச செயலாளரும் அவரது குழுவினரும் அன்றைய தினம் தலைவராலும் அவரது குடும்பத்தினராலும் அவமதிக்கப்பட்டனர். இதனால் பிரதேச செயலாளர் இடைநடுவில் கூட்டத்தை விட்டு வெளியேற வேண்டியநிலை ஏற்பட்டது. இதன் பின்னர் பிரதேச செயலாளர் மறு அறிவித்தல் வரை சங்கக் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என பொலிசார் மூலமாக கட்டளை பிறப்பித்திருந்தார். இதனை முறைப்பாட்டாளர்கள் ஏற்றுக் கொண்டு சங்ககூட்டத்தை தவிர்த்து வந்தனர். ஆயினும் தலைவரும், அவரது சில உறுப்பினர்களும் சங்கக் கூட்டத்தை நடாத்தி கோரம் அற்ற நிலையில் பல தீர்மானங்களை நிறைவேற்றினர். 30.09.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முறைப்பாட்டாளர் சார்பாக முன்நின்று உழைத்தவரும் முன்னாள் தலைவரும் ஆலயத்திற்கு பெரும்பங்களிப்பு செய்துவருகின்றவருமாகிய சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை,  சங்க உறுப்புருமையிலிருந்து பதவி நீக்கம் செய்யும் பிரேரணை முன்மொழியப்பட்டது. இதனை முன்மொழிந்தவர் சங்கத்தில் தலைவரால் புதிதாக இணைப்புவ் செய்யப்பட்ட ஒருவர். கிராமத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பவரும் இவரே என்பதனை மக்கள் நன்கு அறிவர். இப் பிரேரணையை கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் எதிர்த்தமையினால் இக்கூட்டமும் இடைநடுவில் முடிவடைந்தது. இதனால் ஆத்திரமுற்ற கிராமமக்கள் அடுத்த வாரம் வௌ;ளிக்கிழமையில் நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் உட்புகுந்து நியாயம் கேட்க ஆரம்பித்தனர். அன்றைய கூட்டத்திற்கு பொலிசாரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் அன்றைய தினம் தலைவர் கூட்டத்திற்குச் சமூகம் கொடுக்கவில்லை. உபதலைவரே தலைமை தாங்கி கூட்டத்தை நடாத்தினார். அவ்வேளையில் தலைவரால் புதிதாக சங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஒருவர் மதுபோதையில் புகுந்து மாற்றுக் குழுவினரை தாக்கினார். இதனை பல கமராக்கள் படம்பிடித்துக்கொண்டன. வீதியில் இருந்த பொலிசாரும் இதனை அவதானித்துக் கொண்டிருந்தனர். இதனால் இக்கூட்டம் சர்ச்சையில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து உப தலைவரால் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முறைப்பாட்டாளர் சார்பில் இருவரும், கூட்டத்தை நடாத்திய உபதலைவரும் கைது செய்யப்பட்டு கூட்டில் அடைக்கப்பட்டனர். இதன் காரணமாக இப்பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்றது. இரு தவணைகளின் பின்னர் 01-12-2016 ந் திகதி இவ்வழக்கு முடிவுக்கு வந்தது. பிரதேசசெயலாளரின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.
களுவாஞ்சிக்குடி பொலிசாரினதும் பிரதேச செயலாளரினதும் பெரும் முயற்சி காரணமாகவும்,  இந்து கலாச்சார திணைக்களப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாகவும் மீண்டும் ஒரு கூட்டம் பிரதேச செயலகத்தில் 12-12-2016ந் திகதி நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் “அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் யாப்பிற்கு அமைவாக சாதகமான ஒரு நிருவாக சபையை அமைக்க இருப்பதாகவும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்திற்கு கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும்” பிரதேச செயலாளர் கடிதம் மூலம் கேட்டிருந்தார். இதற்கான அழைப்புக்கடிதம் கிராமசேவகரினூடாக இருபது நாட்களுக்கு முன்னரே இருபகுதியினருக்கும் கிடைத்ததாக அறியப்படுகின்றது. ஆயினும் 06-12-2016 ந் திகதியிடப்பட்ட கடிதத்தினூடாக நிருவாகத்தினர் நீதி மன்றில் வழக்கு இருப்பதாக பொய்யான தகவலை மட்டக்களப்பு அரச அதிபருக்கு வழங்கியமையினால் அரச அதிபரினால் இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இவ் அறிவிப்பு இறுதி நேரத்தில் 08-12-2016ந் திகதி பிற்பகலில் முறைப்பாட்டாளருக்கு தெரியவந்தது. நீதி மன்ற வழக்கு 01-12-2016 ந் திகதி முடிவுக்கு வந்தநிலையில் தலைவர் அரசாங்க அதிபரை ஏமாற்ற முனைந்துள்ளது இதனூடாக தெளிவாகின்றது. பின்னர் முறைப்பாட்டாளர்கள் அரச அதிபரை சந்திக்க 09-12-2016ந் திகதி சென்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. இதனால் உரிய தினத்தில் கூட்டம் கைவிடப்பட்டது.

பின்னர் 14-12-2016ந் திகதி நீதிமன்றத் தீர்ப்பு பிரதிகளை அரச அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததன் விளைவாக மீண்டும் 17-12-2016ந் திகதி இக்கூட்டம் ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற அறிவிப்புவ் செய்யப்பட்டது. இக்கூட்டம் தொடர்பான கடிதம் கிராமசேவகரினூடாக இரு பகுதியினருக்கும் வழங்கப்பட்டதோடு, ஆலய ஒலிபெருக்கியிலும் அறிவிப்புச் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் 17-12-2016ந் திகதி பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதேச செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதிகமான பொதுமக்களும் திருவருள் ஆண்கள் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அனைவரினதும் வேண்டுகோளுக்கிணங்க புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது. இதேவேளையில் அன்றைய தினம் தலைவரும் அவரது குடும்பத்தினரும் ஆலய முன்றலில் பிரதேச செயலாளரிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் ஆலயத்திற்கு கடந்த காலத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாதவர்களும், ஆலய பாரம்பரியங்களை விளங்கிக் கொள்ளாதவர்களுமாக இருந்தனர். ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாசிகசாலையில் வாசித்துக் கொண்டிருந்த சிலரும் விடயம் தெரியாமல் இதில் கலந்து கொண்டதாக பின்னர் கூறி வெட்கப்பட்டுக்கொண்டனர். பிரதேச செயலாளருக்கு எதிரான சுலோகங்களைத் தாங்கிக் கொண்டு இவர்கள் இருந்தமை ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

75 வருட ஆலய வரலாற்றில் நடைபெற்றிராத ஒரு கீழ்த்தரமான செயலாக கிராம மக்கள் இதனைக் கருதுகின்றனர். ஜனநாயக முறையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதனை தவிர்த்து சட்டவிரோத நடவடிக்கைகளில் தலைவர் ஈடுபட்டு வருவது ஆலயத்தின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ம.தெ.எ. பற்று பிரதேச செயலாளர் கலாநிதி திரு மூ. கோபாலரெத்தினம் அவர்களின் மதிநுட்பமான செயற்பாடுகளை பிரதேச புத்தி ஜீவிகள் பாராட்டாமல் இருக்கமுடியாது. தலைவரின் ஒவ்வொரு செயற்பாடுகளும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆலயத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதனை தலைவர் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.


Post a Comment

0 Comments