இணைந்த வடக்கிழக்கில் எங்களது பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை தமிழ் பேசும் சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் தனது 29வது நிறைவை முன்னிட்டு அமரத்துவமைடைந்தவர்களான சபாபதி மோகனராசா முத்திலிங்கம் கணேசகுமார் ஞாபகாத்தமாக நடாத்திய மோகன் கணேஸ் ஞாபகாத்த கடினபந்து கிரிக்கேற் சுற்றுப் போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
காரைதீவு பிரதேசத்தில் கடந்த காலத்தில் நான் வாழ்ந்துள்ளேன்.இப்பகுதிக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு நான் தயாராகவுள்ளேன்.காரைதீவானது இந்த நாட்டின் இனவிடுதலைப்போராட்டத்தில் பங்குப்பற்றி ஐந்து இயக்கங்களுக்கும் தாரளமாக துணிவுள்ள போராளிகளை வழங்கிய மண்ணாகும்.
அந்தவகையில் காரைதீவு மண்ணை வடக்கு கிழக்கில் யாரும் மறக்கமுடியாது.காரைதீவு தனி தமிழ் கிராமமாக இருப்பதுடன் தமிழ் தேசியத்திற்காக,விடுதலைப்போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்த கிராமம் என்பதை கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகின்றேன்.
இந்த நாட்டில் நல்லாட்சி என்று கூறப்படும் ஆட்சி நடைபெற்றுவருகின்றது.நல்லாட்சிக்கு முன்னர் இந்த நாட்டில் நடைபெற்றுவந்து ஆட்சி தொடர்பில் அனைவருக்கும் தெரியும்.தமிழ் மக்களின் சொத்துகளை,போராளிகளை கூண்டோடு அழித்த அந்த ஆட்சியை 2015 ஜனவரி எட்டாம் திகதி புதிய ஜனாதிபதியை தமிழ் மக்கள் கொண்டுவந்து கடந்த கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் ஆகஸ்ட் மாதம் புதிய ஆட்சியையும் ஏற்படுத்தினர்.
65வருடகாலமாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணப்படவேண்டும்,நிறைவேற்று ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் தொகுதி முறையிலான தேர்தல் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு வழிநடத்தல் குழுவுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்து எதிர்வரும் ஜனாதிபதி மாதம் புதிய சட்ட மூலத்தை உருவாக்குவதற்குவதற்கான விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த நாட்டில் ஓரு அரசியல்தீர்வு வரவேண்டுமானால் தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால் இணைந்த வடகிழக்கில் எங்களை நாங்களே ஆளக்கூடிய சுயாட்சி வேண்டும் என்பதை தமிழ் பேசும் மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அம்பாறை மாவட்டம் 1961ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி அம்பாறை மாவட்டமாக உருவாக்கப்பட்டது.அக்காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் சனத்தொகை ஒரு வீதம் கூட இல்லை.ஆனால் இன்று தனியொரு தொகுதி அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களுக்கு இருப்பதுடன் தமிழ் பேசும் மக்களை துன்புறுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன.
நூறு வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாணிக்கமடு பகுதியில் புத்தர் சிலை வைக்கும் நிலை உருவாகியுள்ளது.தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும்,இணைந்த வடக்கிழக்கில் எங்களது பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலைக்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை தமிழ் பேசும் சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டாலே தவிர ஒரு சமஸ்டியுடன் கூடிய உயர்ந்தபட்ச அதிகாரப்பரவலாக்கல் உருவாக்கப்பட்டாலே தவிர இந்த நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படாது.
இந்த நாட்டின் அரசியல்அதிகாரத்தை பார்க்கும்போது மும்முனை அதிகார ஆட்சி நடைபெற்றுவருகின்றது.மத்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆளுனர் ஆட்சி,மத்திய அரசாங்கத்தின் நேரடி உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் மாவட்ட செயலாளர் ஆட்சி,மாகாணசபை ஆட்சி.இந்த மும்முனை ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை காணப்படுகின்றது.இந்த நிலைமை மாற்றப்படவேண்டும்.கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைந்திருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
முஸ்லிம் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.1961ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது தொடக்கம் இன்றுவரையில் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவரே அங்கு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.நாங்கள் ஒன்றாக இருக்கவேண்டும்.எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து செயற்படவேண்டும்.
எதிர்காலத்தில் தமிழ் பேசும் இணங்கள் ஒரு அணியாக வடகிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச ரீதியிலே விளையாடக்கூடிய நிலையினை ஏற்படுத்தவேண்டும்.





0 Comments