1994ஆம் ஆண்டின் பின்னர் வலுமான சூறாவளியொன்று சென்னையைத் தாக்கியுள்ளது. சென்னையில் ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் முறிந்து வீழ்ந்தன. நேற்று பிற்பகல் 1 மணிமுதல் இரவு 7 மணி வரையான காலப் பகுதியில் மூன்று கட்டங்களாக வர்தா சூறாவளி சென்னையைக் கடந்தது.
வர்தா சூறாவளியின் மேற்குப் பகுதியானது இரண்டு மணிக்கும், மையப் பகுதி 3 மணி முதல் 4 மணிவரையான காலப் பகுதியிலும், தென் பகுதி 4 மணி முதல் 7 மணி வரையான காலப் பகுதியிலும் தரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இரவு 11.30 மணிக்கு சூறாவளி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறியது. சென்னைக்குள் நுழையும்போது காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 192 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியதுடன், பின்னர் 100 கிலோமீற்றராக காற்றின் வேகம் குறைந்தது.
சூறாவளி மற்றும் கனமழை காரணமாக சென்னை மாநகரிலிருந்தான வான்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்துக்கள் முற்றிலும் தடைப்பட்டன. விமான சேவைகள் யாவும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், சென்னை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகவிருந்த 17 புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.
தெருவுக்கு ஒரு மரம் என்ற வீதம் ஆயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்து முறிந்திருப்பதுடன், வர்த்தக நிலையங்கள் மீது காட்சிப்படுத்தப்பட்டிருந்த பனர்கள், மற்றும் வீடுகளின் கூரைகள் தூக்கிவீசப்பட்டுள்ளன. வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தியொன்றும் காற்றின் வேகத்தால் தூக்கி எறியப்பட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)



0 Comments