தென்னாசியப் பிராந்தியத்தில் இயற்கை வளங்கள் நிறைந்ததும், சிறந்த இயற்கை சுவாத்தியம் கொண்டதுமான நாடே இலங்கை. இந்நாட்டில் பல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுபவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
ஐரோப்பியரின் ஆளுகைக்கு இந்நாடு உட்படுத்தப்பட்டிருந்த போது அவர்கள் கையாண்ட பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட இனங்களுக்கு இடையிலான சந்தேகங்களின் எச்சசொச்சங்கள் சுதந்திரத்தின் பின்னரும் பல தசாப்தங்கள் நீடிக்கவே செய்தன.
இதன் விளைவாக இந்நாடு சுமார் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போருக்கு முகம் கொடுத்ததோடு கோடிக்கணக்கான பெறுமதி மிக்க சொத்து செல்வங்களையும் விலைமதிக்க முடியாத உயிர்களையும் இழந்தது.
2009ம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு வந்ததோடு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கிய சில நாட்களுக்குள் மதவாதம் தலைதூக்க ஆரம்பித்தது. இது நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து உச்ச கட்டத்தை அடைந்தது. அதனால் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்ச நிலை கடந்த ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாட முடியும் என்று இந்நாட்டு அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தும் கூட தமிழ், முஸ்லிம் மக்களால் அந்த உரிமையை அனுபவிக்க முடியாத நிலைமை தோற்றுவிக்கப்பட்டது.
இந்துக் கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்ற மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன வெறுப்பு நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான செயற்பாடுகளின் உச்ச கட்டமாக தர்கா நகர், அளுத்கம, பேருவளையில் முஸ்லிம்களுக்கு பேரழிவே ஏற்படுத்தப்பட்டது.இச்செயற்பாடுகளின் பிரதான சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் ஆஜர்படுத்த முடியாத நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் பேணும் தரப்பினர் உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
அமைச்சரவை அமைச்சரின் அமைச்சுக்குள் தேடுதல் நடத்தும் அளவுக்கு மதவாதக் குழுக்கள் வலுப்பெற்று இருந்தன. இதனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது.
இவ்வாறான சூழலில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், நாட்டின் மீது உண்மையாகவே அன்பு கொண்ட மக்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி ஒன்றுபட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டது. அதனூடாக சிறுபான்மை மக்கள் அச்சம் பீதியின்றி நம்பிக்கையோடு வாழும் சூழல் உருவானது.
ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட இனவாதமும், மதவாதமும் பொதுத்தேர்தலிலும் படுதோல்வி அடையச் செய்யப்பட்டது.
அத்தேர்தலில் நாடெங்கிலும் போட்டியிட்ட பொதுபல சேனா ஒரு பாராளுமன்ற ஆசனத்தைக் கூட வெற்றி பெற முடியாது படுதோல்வி அடைந்ததோடு அதன் செயலாளர் ஞானசார தேரரும் தோல்வியைத் தழுவினார்.
இந்த இரண்டு தேர்தல்களின் முடிவுகளும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் நல்ல பாடமாக அமைந்தது. நாட்டில் பெரும்பாலான மக்கள் இனவாதத்தையோ மதவாதத்தையோ விரும்பவோ ஆதரவளிக்கவோ இல்லை என்பது தெளிவுபடுத்தப்'பட்டது.
இத் தீய செயற்பாடுகளை விரல் விட்டெண்ணக் கூடிய சிலரே முன்னெடுக்கின்றனர் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.நல்லாட்சியின் ஆரம்பத்தோடு செத்த பாம்பான இவர்கள் அவ்வப்போது மீண்டும் தலைதூக்க முயற்சி செய்த போதிலும் அதற்கு இடம் கிடைக்கவில்லை.
என்றாலும் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இடம்பெற்று வரும் நிகழ்வுகள் மீண்டும் நாடு மதவாத சகதி மிக்க இருண்ட யுகத்தை நோக்கி நகருகின்றதா என்ற ஐயத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
குருநாகல், தெல்லியாகொன்ன பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல்,
நிக்கவெரட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்,
இறக்காமம் மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை,
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கோட்டையில் விரல் விட்டெண்ணக் கூடிய ஒரு சிலர் நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உமிழப்பட்ட இன விரோத வசனங்கள்,
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி பட்டிப்பளை பிரதேச செயலாளரை மிக மோசமாகத் தூற்றி காக்கிச் சட்டை அணிந்திருந்த பொலிஸாரையும் தாக்க முற்பட்டமை
மாத்திரமல்லாமல் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரப்பட்டு வரும் தமிழ், முஸ்லிம் இன வெறுப்பு பேச்சுக்கள் போன்றவை இவற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.
எனினும், இச்செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் எவரும் நேற்று வரையும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் பட்டிப்பளை பிரதேச செயலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து அங்கு பொலிஸார் மீதே தாக்குதல் நடத்துவதற்கும் முயற்சி செய்யப்பட்டுள்ளது.
பேரினவாத சிந்தனையுடன் செயற்படும் சிலரின் இவ்வாறான செயற்பாடுகள் நீடிக்குமாயின் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வரும் சகவாழ்வு நல்லிணக்க வேலைத் திட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்படுவதோடு சட்டம் ஒழுங்கிலும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலைமை எற்படும்.இதுவே மக்களின் கருத்தாக உள்ளது.
ஆகவே நாட்டின் மீது உண்மையில் அன்பு கொண்டவர்கள் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு இனவாத மற்றும் மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பி செயற்பட வேண்டும்.
நாட்டில் ஒருவரை ஒருவர் மதித்து வாழும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.
அதற்காக ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக உழைக்க வேண்டும்.
அப்போது நாட்டில் சுபீட்சம் நிறைந்த வளமான காலம் உருவாகும்.
0 Comments