Advertisement

Responsive Advertisement

வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாக அமையட்டும் - ஜனாதிபதி

உலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இத் தீபத்திருநாள் அனைவருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு பண்டிகையாகவும் அவர்களது வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாகவும் அமைய வாழ்த்துகின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், இருளால் கொண்டுவரப்படும் தீமைகளாலும், அஞ்ஞானத்தாலும், இழப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒளியைத் தேடிச் சென்ற மனிதன் தீமைகளுக்குப் பதிலாக நன்மையையும் அறியாமைக்கு எதிராக அறிவையும் இழப்புகளுக்கு எதிராக நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் உலக உண்மையே தீப ஒளியில் பிரகாசிக்கின்றது.
பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதல்களும் அதனால் சமூகத்தின்மீது படர்ந்திருந்த இருளும் நீங்கிய இன்றைய சூழ்நிலையானது எமது சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்ல கிடைத்த பெறுமதியான வாய்ப்பாகும் எனக் கருதுகிறேன்.
ஒரு நாட்டினதும், சமூகத்தினதும் சுபீட்சமானது அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சக வாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும், சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனையாக அமைய வேண்டுமென நான் கருதுகின்றேன்.
ஐக்கியமென்பது இன்றைய உலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனையாகியுள்ள பின்னணியில், நாம் அனைவரும் ஆழமான பிணைப்புடனும் உண்மையான புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியமாகும். என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments