நாட்டிலுள்ள அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சியை முடித்த, பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் ஆசிரிய பயிற்சிக்கான இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கல்வி அமைச்சு இன்னும் வெளியிடவில்லை.
இதனால் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பலர் சம்பள உயர்வுகள் ஏதுமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலையும், விசனமும் தெரிவித்துள்ளனர்.
இரண்டாண்டு முழு நேர ஆசிரியப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நாடாளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன.
அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த யூலை மாதமளவில் வெளியிடப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அப்பெறுபேறுகளை வெளியிடுவது பற்றி கல்வி அமைச்சு அக்கறையின்றி இருந்து வருவதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், நாடளவிய ரீதியிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளிலிருந்து ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்களே இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள்.
இவர்களில் அதிகமானவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த, மிகவும் குறைந்த சம்பளம் பெறும் ஆசிரியர்களாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
கடந்த காலங்களிலும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை கல்வி அமைச்சு உரிய காலத்தில் வெளியிடாமல் இழுத்தடித்துக் காலங்கடத்தி வந்தது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமது பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரி மாகாணக் கல்வி அமைச்சு அலுவலகங்களின் முன்பாகப் போராட்டங்களில் ஈடுபட்டதன் பின்னரே அவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
இதேவேளை, நாட்டிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சி பெற்று பரீட்சைப் பெறுபேறுகளுக்காகக் காத்திருப்பவர்களில் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டவர்களாகத் தமிழர்களே காணப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: