சிறுபான்மை உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின்வி சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா இசாக் நதியா தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மலே, வேடூவர் முதலான சகல சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடிளார். தனது விஜயத்தை பூர்த்திசெய்யும் முகமாக நேற்றையதினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1951ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்துச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சர்வதேச மனித உரிமைத் தரத்துக்கு உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் இனங்களுக்கிடையில் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கையீனங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நதியா 2015ல் ஆட்சி பீடம் ஏறிய அரசு பெற்ற உத்வேகத்தை இழக்காமல், சிறுபான்மை உரிமைகள் மீதான கடப்பாட்டை திடமான நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
சகல இன மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதை சகல இனங்களும் உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியமானதும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், இனங்களின் சகல மட்டங்களிலும் நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீதி, கொள்கைத் தயாரிப்பு, யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களை நீக்குதல், உடல்ரீதியான வன்முறைகள் தொடராதிருத்தல் போன்ற முக்கியமான நல்லிணக்கம் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. எவ்வாறேனும் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த சகல மக்களினதும் கௌரவத்தையும், அடையாளத்தையும், சமத்துவத்தையும் சிறப்பாகப் பாதுகாப்பதற்கான அரசியல் கடப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தக்கூடிய ஸ்திரமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்தகால செயற்பாடுகளான கலாசார அடக்குமுறை, வெளிப்பாட்டுக்கான அடக்குமுறை, இனரீதியான சகிப்பின்மை, பாரபட்சம் காட்டுதல் போன்றவை சமூக, கலாசார ஒழுக்கநெறிகளை, அடையாள உணர்வை, நம்பிக்கை என்பவற்றை மோசமாகப் பாதிக்கலாம்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
0 Comments