“இலங்கையில் கூடிய விரைவில் நிலையானதும் கௌரவமானதுமான சமாதானத்தை கொண்டுவரும் நோக்கில் புதிய செயலாளர் நாயகத்தோடு இணைந்து செயலாற்றுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஐ. நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். “ஏகமனதாக இடம்பெற்ற அவரது தெரிவானது அவர் மேலுள்ள நம்பிக்கைக்கு ஒரு ஆதாரமாகும்” எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்ற அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பானது, நீதி மற்றும் சமவுரிமையை அடிப்டையாக கொண்டு பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டிற்குள் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருமத்தில் தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் உண்மையை நிலைநாட்டி இழப்பீடு மற்றும் மீள் இடம்பெறாமை போன்றவற்றை உறுதி செய்வதன் மூலம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் முகமாக வெளிச்செல்லும் செயலாளர் நாயகம் முன்னெடுத்த பணிகளை, புதிய செயலாளர் நாயகம் தொடர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பானது வலியுறுத்த விரும்புகின்றது.
இலங்கையில் கூடிய சீக்கிரத்தில் நிலையானதும் கௌரவமானதுமான சமாதானத்தை கொண்டுவரும் நோக்கில் புதிய செயலாளர் நாயகத்தோடு இணைந்து செயலாற்றுவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாகும்
0 Comments