Home » » இந்துசமுத்திர திருப்பாற்கடலில் தமிழருக்கு கிடைக்கப் போவது நஞ்சா? அமிர்தமா?

இந்துசமுத்திர திருப்பாற்கடலில் தமிழருக்கு கிடைக்கப் போவது நஞ்சா? அமிர்தமா?

“இந்து சமுத்திரம் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பகுதி. அது உலக வர்த்தகத்தில் தலையாய பகுதி. அதன் மத்தியில் இருக்கும் நாங்கள் அதனை உணர்ந்து பயன்படுத்தி முன்னேற வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு சமாதானத் தீர்வு முக்கியம்” இவ்வாறு 17ஆம் தேதியன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
21ஆம் நூற்றாண்டின் உலக வரலாறானது இந்துசமுத்திரத்தை முதுகெலும்பாகக் கொண்ட வரலாறாகவே அமையும் என்று அரசியல் பொருளாதார, வரலாற்று அறிஞர்கள் தெளிவுபட உரைத்துள்ளனர். இதனால் இந்துசமுத்தின் மத்தியில் உள்ள இலங்கையில் அரசியல், பொருளாதார, வர்த்தக, இராணுவ அர்த்தத்தில் சிறப்பான இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
புவிசார் அரசியல், பூகோள அரசியல், இந்துமாகடல் அரசியல், சர்வதேச அரசியல், உள்நாட்டு அரசியல் ஆகிய அனைத்து அரசியல் சக்திகளுக்கும் இடையே தமிழ் மக்களின் அரசியல் சிக்குண்டுள்ளது. இதனை நுனிப்புல் மேயும் அரசியல் அணுகுமுறைகளினாலோ அன்றி எழுமாத்திர அரசியல் அணுகுமுறைகளினாலோ ஒருபோதும் அணுகமுடியாது.
அரபிக் கடலில் பாகிஸ்தானின் பலூச்சி மாநிலத்தில் குவாடர் (புறயனயச) என்னும் துறைமுகம் அமைந்துள்ளது.  இத்துறைமுகத்தை பாகிஸ்தானிடமிருந்து 43 வருடகால குத்தகைக்கு சீனா பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் இவ்வருடம் யூன் மாதம் கையெழுத்திடப்பட்டது.
இதன்படி 2059ஆம் ஆண்டுவரை இத்துறைமுகம் சீனாவிற்கு சொந்தமாகிறது. இத்துறைமுகம் பாகிஸ்தானின் வடபகுதியை சீனாவின் மேற்குப்பகுதியுடன் தரைவழியே இணைக்கிறது. இதற்கான வீதி மற்றும் தொடர்வண்டிப் பாதைகளும் அமைக்க ஏற்பாடாகியுள்ளது. சுமாராக அரை நூற்றாண்டுகால நோக்குநிலையில் சீனப் பேரரசின் இந்த அரசியல் நகர்வு அமைந்திருக்கிறது. இப்படியே அமெரிக்காவும் நூற்றாண்டுகால நோக்கு நிலையில் இருந்து இந்துசமுத்திர அரசியலை திட்டமிட்டு அணுகுகின்றது.
15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 1412ஆம் ஆண்டு சீன கடற்படைத் தளபதி செங் ஹீ (ணூநn ர்ந) கொழும்பு கோட்டை இராட்சியத்தை ஆக்கிரமிப்பதில் வெற்றி பெற்றார். 10ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் வாவியாக காணப்பட்ட இந்துசமுத்திரத்தில் சோழர்களுக்;கு பின் 15ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக சீனா தன் இந்துசமுத்திர பிரவேசத்திற்கான மணியை அடித்தது.
அக்காலத்தில் இலங்கையில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டானது சீன மொழி, பாரசீக மொழி, தமிழ் மொழி ஆகிய மும்மொழிகளில் அமைந்திருந்தது. அந்தக் கல்வெட்டில் இந்துதெய்வங்களை உலகளாவிய வர்த்தகம் செழித்தோங்க வரம் அருளுமாறு கேட்டப்பட்டிருந்தது. சோழப் பேரரரசின் எழுச்சியிலிருந்து 15ஆம் நூற்றாண்டு முடியும் வரை தமிழ்மொழி இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வர்த்தக மொழியாக இருந்துள்ளது என்பதை காலியில் கண்டெடுக்கப்பட்ட 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு நிரூபிக்கின்றது.
ஆனால் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய பேரரசான துருக்கிய பேரரசுக்கு சவாலாக ஐரோப்பியர் கடலோடித்துறையில் கால் வைத்தனர். அதன் விளைவாக 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இந்துசமுத்திரம், பசிபிக் சமுத்திரம், அத்லாண்டிக் சமுத்திரம் என்பன ஐரோப்பியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டன.
எப்படியோ 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்துசமுத்திரத்தின் ஏகப்பெரும் ஆளுமை பிரித்தானியாவின் வசமானது. இதையடுத்து 2ஆம் உலக மகாயுத்தத்தின் பின் பிரித்தானியாவிடம் இருந்து அமைதியாக இந்துசமுத்திரததின் மீதான ஆதிக்கம் அமெரிக்காவின் கைக்கு மாறியது. இப்போது சீனா 15ஆம் நூற்றாண்டில் விட்ட இடத்தில் இருந்து (இலங்கை) தனது ஆதிக்கத்தை இந்துசமுத்திரத்தின் மீது செலுத்த முனைகிறது.
இன்று இந்துசமுத்திரமானது அமெரிக்கா – சீனா – இந்தியா ஆகிய முப்பெரும் சக்திகளுக்கிடையேயான முக்கோண வியூகத்திற்குள் அகப்பட்டிருக்கிறது. இந்த முக்கோண வியூயகத்திற்குள் சிக்குண்ட அப்பாவி மக்களாக ஈழத்தமிழர் உள்ளனர். இதனை சிறிதும் அப்பாவித்தனமாகவோ, குறுங்கால நோக்குடனோ, வசீகரம் கொண்ட சுவையான கற்பனைகளுக்கு ஊடாகவோ அணுகக்கூடாது.
அதிக புத்திசாலித்தனமும், அதிக சாதூர்யமும், அதிக விழிப்புணர்வும், அதிக முன்னெச்சரிக்கையுமின்றி ஒருபோதும் அணுகக்கூடாது.
கடலே உலக ஆதிக்கத்தின் திடல். அத்லாண்டிக் சமுத்திரம், பசிபிக் சமுத்திரம் ஆகிய இருபெரும் சமுத்திரங்களால் அரணமைக்கப்பட்ட தரைவழியே இருகண்டங்களுக்கு அதிபதியான நாடு அமெரிக்கா. அதற்கு சவால் இரு அமெரிக்க கண்டங்களிலும் கிடையாது. அது தனது பாதுகாப்பிற்கும் விரிவாக்கத்திற்கும் கடலையே ஏதுவாகக் கொண்டுள்ளது. ஆதலால்தான் அமெரிக்காவின் பிரதான படை கடற்படையாக அமைந்தது. உலகிலேயே முதலாவது கடற்படைத்தளம் நோர்போல்க் (ழேசகழடம) ஆகும்.
அமெரிக்காவிற்கு வெளியே இந்துசமுத்திரத்தில் இருக்கும் அதன் மாபெரும் கடற்படைத்தளம் டியாகோ காசியா (னுநைபழ புயசஉயை) ஆகும். இப்போது அமெரிக்காவோடு இந்துசமுத்திர ஆதிக்கத்திற்கு சவாலாக எழுந்திருக்கும் நாடு சீனாவாகும்.
இலங்கைக்குக் கீழே தென்இந்துசமுத்திரத்தில் அமைந்திருக்கும் இந்த கடற்படைத்தளம் மேற்காசியா, தென்னாசியா ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் மேலாண்மை செய்ய போதுமானதாகும். அதற்கு இராணுவ அர்த்தத்தில் இலங்கை அவசியமில்லை. ஆனால் இலங்கை வேறொரு உலப் பேரரசின் கையில் அதாவது சீனா அல்லது ரஷ்யா போன்ற வல்லரசுகளின் கையில் சிக்குண்டுவிட்டால் அமெரிக்காவின் டியாகோ காசியா தளம் சவாலுக்கு உள்ளாகி அமெரிக்காவின் இந்துமாகடல் ஆதிக்கமே கேள்விக்குள்ளாகிவிடும்.
சீனா வரைந்துள்ள பட்டுப்பாதை வீதி (ளுடைம சுழரவந) வரைபடமானது வர்த்தக ரீதியாக இந்த உலகத்தை சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வரைபடமாகும். இந்தப் பெயரை கிறிஸ்துவிற்கும் முற்பட்ட 3ஆம் நூற்றாண்டு வர்த்தக மற்றும் சீனப் பண்பாட்டு வேரிலிருந்து சீனா வடிவமைத்துள்ளது. அதன் நோக்கம் பின்னோக்கி எப்படி 2000க்கு மேற்பட்ட ஆண்டுகால வரலாற்றுக்குப் போயுள்ளதோ அவ்வாறே அது முன்னோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகால எதிர்காலச் சிந்தனையையும் கொண்டுள்ளது.
சீனா 80,000 ஆண்டுகளுக்குக் குறையாத பழம்பெரும் நாகரீகத்தைக் கொண்ட ஒரு தேசம் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டில் உலகில் காணப்படும் பலம்பொருந்திய முன்னணி நாடுகளுள் ஒன்றுமாகும்.
இந்துசமுத்திரம் சீனாவின் பிரதேசம் இல்லையென்றாலும் அது சீனாவிற்கு அண்டைப் பிரதேசம். ஆனால் அது அமெரிக்காவிற்கு கண்டங்கள் கடந்த பிரதேசம். அதேவேளை இந்துசமுத்திரத்தின் பிராந்தியத்திற்குரிய தலையாய நாடான இந்தியாவால் இந்துசமுத்திரத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியாத நிலையில் இருப்பதால் இங்கு சீனா தன் கையை இலகுவாக ஓங்கச் செய்ய முயல்கிறது.
எப்படியாயினும் இங்கு அமெரிக்கா – சீனா – இந்தியா என்ற மூன்று பெரும் அரசுகள் சம்பந்தப்படும் நிலையில் இதில் மூன்றாவது பலம் கொண்ட இந்தியாவின் பாத்திரம் அமெரிக்காவோடு கூட்டுச் சேரும் போது காரிய சித்தியுள்ளதாக மாறுகிறது.
எப்படியோ இம்மூன்று அரசுகளுக்கும் இடையே போட்டி இருந்தாலும் ஒரு புள்ளியில் அவை இருஅணிகளாகும். அப்போது சீனா அரசானது இன்னொரு அணுவாயுத அரசான பாகிஸ்தானுடன் கூட்டுச் சேரும் போது இங்கு நிலைமை ஏறக்குறைய சமபலம் அடைய முடியும். இத்தகைய சமபலம் அடைய முடியும் என்ற கணக்குத்தான் இங்கு அரசியல் போட்டிகளை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக்கக் காரணமாகிறது. இந்த கடுமைக்குள் இலங்கைத் தீவும் அங்கு வாழும் ஈழத்தமிழர் பிரச்சனையும் சிக்குண்ணுகிறது.
இலங்கைத் தீவில் சிங்கள மக்களிடம் அரசு இருக்கிறது. அரசுள்ள இனத்தால் தன்னை தற்காத்துக்கொள்ளவும், அதேவேளை ஈழத் தமிழர் பிரச்சனையையும் தனக்கு சாதகமாக்கி முன்னேற முடியும். ஆனால் அரசற்ற ஈழத்தமிழர்களின் கதியோ மிகவும் அபாயகரமானது.
எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருந்தால் என்ன, வானில் இருந்து பார்க்கவல்ல நட்சத்திர யுத்தத்திரன் இருந்தால் என்ன அவற்றால் இலக்கைத் தாக்கவும் அழிக்கவும் முடியுமே தவிர தரையில் கால் வைக்காமல் எதனையும் செய்ய முடியாது.
“50அடி கம்பத்தின் உச்சியில் நின்று சாகசம் புரிந்தாலும் 50 காசு வாங்க தரைக்குத்தான் இறங்க வேண்டும்”
மின்னியல் பிராந்தியம் (நு-சுநபழைn), மின்னியல் வர்த்தகம் (நு-ஊழஅஅநசஉந) என எத்துணை “ஈ” – தொழில் நுட்பங்கள் (நு-வுநஉhழெடழபல) வந்தால் என்ன, வர்த்தம் செய்ய கடல்பாதையும், தொடர்வண்டிப் பாதையும் தேவை. ஏனெனில் பண்டங்களை “ஈ”யில் ஏற்றிச் செல்ல முடியாது. கப்பலில் அல்லது தொடர்வண்டியிற்தான் ஏற்றிச் செல்லலாம். கடல் வெறும் வர்த்தக போக்குவரத்துப் பாதை மட்டுமல்ல. அது மூலப்பொருட்கள் அடங்கிய பகுதியுமாகும். ஆதலால் கடல் தனது முக்கியத்துவத்தை ஒருபோதும் இழக்கமாட்டாது. அதேவேளை அரசுகளால் தம்மிடமிருக்கும் தொழில்நுட்ப பலத்தைக் கொண்டு யுத்தம் புரிந்து அடையும் நன்மையைவிட இராணுவ தளங்களை கேந்திர முக்கியத்தும் உள்ள இடங்களில் வைத்திருப்பதன் மூலம் பேரம் பேசும் சக்தியை உயர்த்தவும், ஆக்கிரமிப்பு யுத்தத்தால் அந்த மக்கள் அடையக்கூடிய கோபத்தை தவிர்த்து இராணுவ தளங்கள் வாயிலான பேரங்களை உயர்த்துவதும், தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் இலாபகரமானது. எனவே கேந்திர நிலையங்களில் இராணுவத் தளங்களை அமைக்கும் அரசியலுக்கும் ஓய்வு கிடைக்கமாட்டாது.
மேற்படி இப்பின்னணியிற்தான் ஈழத் தமிழர் பிரச்சனையை நாம் அணுக வேண்டும். இந்துசமுத்திரத்தில் சீனாவின் இதயத்தில் இலங்கைதான் பட்டத்து இராணி. ஆனால் அந்த இராணியை அடைவதில் அவ்வப்போது தடைகள் ஏற்படும் போது அதற்கு மாற்றான சின்னவீடாக அரபிக் கடலில் பாகிஸ்தானின் ஆதிக்கத்திற்குரிய குவாடர் துறைமுகம் காணப்படுகிறது.
19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியவிற்கும் அமெரிக்காவிற்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் தன் துறைமுகங்களை கையறுநிலையில் குத்தகைக்கு விட்ட சீனா இன்று இந்துசமுத்திரத்தில் துறைமுகங்களை குத்தகைக்கு எடுக்கின்றது. துறைமுக குத்தகை முறைக்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சீனா இன்று இந்துசமுத்திர நாடுகளின் துறைமுகங்களை தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் குத்தகை முறையில் கையெழுத்திட தொடங்கியுள்ளது.
யூன் மாதம் மேற்படி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவாடர் துறைமுகத்திற்காக கையெழுத்திட்டதன் பின்பு இந்;திய அரசு பலுச்சி மக்களின் பிரச்சனை மீது அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தின வைபத்தின் போது இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் ஆற்றிய உரையில் பலுச்சி மக்கள் மீதான தமது அக்கறையை வெளிப்படுத்த தவறவில்லை. இதில் அமெரிக்காவின் நிலைப்பாடும் வெளிப்படையாக இல்லாது விட்டாலும் மனசார இதற்கு ஒத்ததாகவே இருக்கும்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் அமெரிக்கா – சீனா –  இந்தியா போன்ற நாடுகளின் கவனம் இத்தகைய பிராந்திய நலன்சார்ந்த பின்னணியிலேயே நிகழும்.
இலங்கையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பும் இத்தகைய பின்னணியின் வெளிப்பாடாவே அமையும். இலங்கை பிரதமரின் மேற்படி யாழ்ப்பாண உரையில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து அரசியல் தீர்வுகாண வேண்டும் என்ற அவரது குரலில் இந்துசமுத்திர பிராந்தியத்தோடு இணைந்த இலங்கை அரசின் நலனுக்கான முக்கியத்துவத்திலும் அதற்குத் துணையான வெளி அரசுகளின் நலன்களுக்கும் பொருத்தமாக அரசியல் தீர்வு அணுகப்படும்.
இக்கட்டுரையானது மேற்படி பிராந்திய அரசியல் நலனோடும் அதுசார்ந்த சக்திகளோடும் ஈழத்தமிழரின் அரசியல் பின்னிப்பிணைந்திருக்கின்றது என்பதையும் அதற்கான அரசியல் மரபணுப்படத்தையும் வரைந்ததையும் தவிர ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்புநிலையை அது ஆராயவில்லை. அதை இனிவருக்கூடிய கட்டுரைகளில் நோக்கலாம் என்பதோடு அது இங்கு நிறுத்தப்படுகிறது.
“ஓன்றுக்கு ஆசைப்படும் முன் முதலில் உன்னை அதற்குத் தகுதியாக்கிக்கொள்” என்று ஓர் ஆங்கிலப் பழமொழியுண்டு.
ஈழத்தமிழர்கள் இப்போது தமக்கான உரிமையைப் பெறுவதற்கு தம்மை சரிவர தகவமைத்துக் கொள்ளவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளனர். வச்சிரம் போன்ற முதுகெலும்பைக் கொண்ட தலைவர்களையும், மண்டைப் பலம் கொண்ட அறிஞர்களின் வருகைக்காகவும் தமிழ் மக்களின் வரலாறு செங்கம்பளம் விரித்து காத்துக்கிடக்கிறது.
எவனொருவன் தன் இரத்தத்தையும், வியர்வையையும், மூளைநரம்பு நாளங்களையும், ஆயுளையும், ஆத்மாவையும் தம்மின மக்களின் நீதிக்காக அர்ப்பணிக்கின்றானோ அவனே அம்மக்களின் வரலாற்று நாயகனாய் விளங்குவான்.
நான் மண்டேலாவைக் கண்டேன்; சிறையிலிருக்கும் மண்டேலாவை மக்களின் முகங்களில் கண்டேன். நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு கருங்கல் உடைக்கும் கடூழியக்கைதியாக மண்டேலா இருந்தார் . அவர் கடுங்கற்பாறைகளை ஹமரால் அடித்து நொருக்கும் போது வெள்ளை இன ஆதிக்கத்தின் மீது அடிபோடும் உணர்வோடு அந்தக் கற்களை உடைத்தார். சிறையில் எழுந்த அந்த ஒலி மக்களின் குரலாய் தெருக்களையும் வானத்தையும் பிளந்து எழுந்தது. வெள்ளையரின் கண்ணில் மண்டேலா ஒரு கைதி, வரலாற்றின் மடியில் மண்டேலா ஒர் உலக வரலாற்று நாயகனாய்த்  திகழ்ந்தார்.
விலை போகாத அந்த மனிதன்,இலட்சக்கணக்கான ஆண்டுகால தமது பண்பாட்டின் கலசமாகத் திகழ்ந்த அந்த மனிதன் எதிரிகளையும் தலைவணங்கச் செய்யும் நாகரீகம் கொண்ட அந்த மனிதன்  தென் ஆபிரிக்காவின் விடுதலை வீரனாக மட்டுமன்றி, கறுப்பின மக்களின் மதிப்புக்கும் அந்தஸ்துக்குமான குறியீடு ஆனார். மக்களைப் பிரதிபலிக்கும் தலைவன் மக்களின் முகங்களில் காட்சியளிப்பான்.
இலட்சக்கணக்கான ஆண்டுகால மனிதகுல நாகரீகத்தையும் பரந்த உலகையும் பன்னாட்டு உறவுகளையும் ஒடுக்கப்படும் கறுப்பின மக்களினது உரிமைகளை ஒரு நேர்கோட்டில் இணைத்து தென் ஆபிரிக்க மக்களின் விடுதலையை வடிவமைத்தார். அதன் மூலம்தான் அவரால் வெற்றிகரமான வழிகாட்டியாகவும் தலைவனாகவும் வரலாற்றைப் படைக்க முடிந்தது.
தென் ஆபிரிக்காவின் மொத்த சனத்தொகையில் கறுப்பின மக்கள் 79வீதம். இனத்தால் ஒரே கறுப்பினத்தவரானாலும் ஆயிரக்கணக்கான குலமரபுக்குழுக்களின் தொகுப்பாகவே அந்த மக்கள் இருந்தார்கள். அத்தகைய ஆயிரக்கணக்கான குலமரபுக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் அணிதிரட்டுவது என்பது ஓர் இலகுவான காரியமல்ல. அத்தகைய குலமரபு வேறுபாடுகளைக் கொண்ட கறுப்பினத்தவர்களை மட்டுமன்றி அங்கு வாழ்ந்த கலப்பினத்தவர்கள்(9மூ) ஆசியக் குடியேறிகள் என்போரையும் ஒருங்கிணைத்து மொத்த சனத்தொகையில் 10வீதத்தினரான வெள்ளையர்களில் பெரும் தொகையினரை தன்பக்கம் அணைத்து விடுதலையைச் சாத்தியமாக்கினார் மண்டேலா.
மண்டேலாவிடமிருந்து விடுதலைக்கான படிப்பினைகளை 21ம் நூற்றாண்டு மனிதர்கள் மற்றும் விடுதலை விரும்பிகள் என்போர் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.இதற்காக உரிமைக்காக போராடும் தமிழ் மக்கள் உலக நீதிகளையும் அதில் தமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புக்களையும் தாண்ட வேண்டிய தடைகளையும் அறிவுபூர்வமாக கற்றறிந்து தமக்கான விமோசனத்தை சாத்தியமாக்க வேண்டும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |