தயா மாஸ்டர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டவலுவற்றது என சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு விசாரணையில் ஆஜராகிய சட்டத்தரணி சுமந்திரன், வழக்கு விசாரணை முடிந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வேலாயுதம் தயாநிதி என்கின்ற தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்ற தவணை தெரிவித்ததற்கு அமைவாக ஒரு பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்து வாதிட்டிருந்தேன். இவரை குற்றம்சாட்டியுள்ள குற்றப் பத்திரிகை சட்டவலுவற்றது என்றும் அந்தக் குற்றப் பத்திரிகையில் இவர் செய்ததாக சொல்லப்பட்ட விடயம் சட்டத்தின் பிரகாரம் ஒரு குற்றமல்ல என்றும் அவசாரகால விதிமுறைகளாக சொல்லப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் ஒவ்வொன்றும் அவசரகால விதிமுறைகள் அல்ல என்றும் அவை பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவுக்கு அப்பாற்பட்டது என்றும் அதேவேளை அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் மீறுவதாக அமைந்திருப்பதனாலும் நியாயமற்றவையாக இருக்கின்ற காரணத்தினாலும் தெளிவற்றதாக இருக்கின்ற காரணத்தினாலும் அது சட்ட வலுவற்ற விதிமுறைகள் என்று தீர்பளித்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்திருக்கின்றேன்.
இதேவேளையிலேயே, அவருக்கு கையளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையிலேயே சொல்லப்பட்ட குற்றம் 7ஈ என்கிற குற்றமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது பிழையாக சொல்லப்பட்டிருப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி சொன்னார். சிங்களத்திலே தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை தான் சரியானது என்று வாதிட்டார். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசகரும மொழி, நீதிமன்ற மொழி தமிழ் மொழி என்பது அரசமைப்பு சட்டத்தின் கீழே விசேடமாக 16வது திருத்தச் சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டிருப்பதை நான் சுட்டிக்காட்டினேன். அதன்காரணமாக குற்றப் பத்திரிகையை திருத்துவதாகவும் அரசதரப்பு சட்டத்தரணி சொன்னார். ஆனால் அவர்கள் அதனை திருத்த எத்தனிக்கின்ற போது அதற்கு எதிரான எங்களது ஆட்சேபனையை முன்வைப்போம்.
நான் சொன்ன பூர்வாங்க ஆட்சேபனை சம்மந்தமாக மேல் நீதிமன்ற நீதிபதிக்டகு ஒரு விளக்கம் தேவைப்பட்டது. அதாவது அப்படியாக சட்டவலுவற்றதாக இருந்தாலும் சட்டவலுவற்றது என்ற தீர்ப்பைக் கொடுப்பதற்கு மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா என்பதைக் குறித்து ஒரு வினாவை எழுப்பியிருக்கிறார்.
மேல் நீதிமன்றத்திற்கும் அதே அதிகாரம் இருக்கிறது என்பது என்னுடைய வாதம். ஆனால் அது தொடர்பான ஆதாரத்தை எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறு நவம்பர் 18 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இரு தரப்பினதும் எழுத்து மூல சமர்ப்பணத்துடன் வாய்மொழி மூல சமர்ப்பணமும் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
0 Comments