Advertisement

Responsive Advertisement

பான் கீ மூனிடம் கூட்டமைப்பின் தலைமை சொல்லப்போவது என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் 8ஆவது பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வருகிறார். எதிர்வரும் 31ஆம் திகதி இங்குவரும் அவர் செப்டெம்பர் 2ஆம் திகதிவரை இருப்பார். அவரது ஆசியநாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாகவே இலங்கைக்கு வருகிறார் அவர். சிங்கப்பூர், இலங்கை, சீனா, மியன்மார், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்வார். அவர் சீனாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிலும் லாவோஸில் நடைபெறும் ஆசியான் மாநாட்டிலும் கலந்து கொள்வார்.
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் பெரிதும் செல்வாக்கு செலுத்தும் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ‘பேண்தகு உலக அபிவிருத்தியில் ஐ.நா.வின் இலக்கு’ என்பது பற்றி உரையாற்றவிருக்கிறார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பற்றி பார்வையிடவிருக்கிறார். காலியில் நடைபெறவுள்ள நல்லிணக்கத்திலும் சகவாழ்விலும் இளைஞர்களின் பங்கு பற்றிய நிகழ்விலும் கலந்துகொள்வார்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் 2009 மே 19இல் முடிவுறுத்தப்பட்டு ஒரு சில தினங்களில் இலங்கைக்கு வந்து ஏறக்குறைய மயானமாக இருந்த வடக்கை ஹெலிகொப்டரில் இருந்தவாறு பார்வை இட்டுச் சென்றார். அவரது தலைமையிலான ஐ.நா.நிர்வாகம் இலங்கையில் யுத்தத்தினால் இடம்பெற்ற பேரழிவை தடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கத்தவறி விட்டதாக பாரிய குற்றச்சாட்டிருக்கிறது. இருந்தபோதும், அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளின் வலைப்பின்னலின் ஆசீர்வாதத்துடன், பல நாடுகளின் உதவியுடன் யுத்தம் புரிந்து யுத்தத்தை முடிவுறுத்திய ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்து வெளியிட்ட அல்லது ராஜபக்ஷ பான் கீ மூனுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளித்தல்,பிரதேசங்களை புனரமைத்தல், இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றல், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், பொறுப்புக்கூறல் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என உறுதி கூறியிருந்தது.
வாசுதேவ நாணயக்கார கூறுவது போன்று அது கூட்டறிக்கையேயன்றி உடன்படிக்கை அல்லவென்றாலும், அக்கூட்டறிக்கை குப்பைக் கூடைக்குள் போடுமளவிற்கு பெறுமதியற்றதல்ல. அதனை குப்பைக் கூடைக்குள் போடும் வகையில் ராஜபக்ஷ அரசாங்கம் நடந்து கொண்டதாலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டதுடன், ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச ரீதியாக பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகக் கூடாது என்ற சர்வதேச அபிப்பிராயத்திற்கு பான் கீ மூனுடனான கூட்டறிக்கையை உதாசீனம் செய்ததும் ஒரு காரணமாக அமைந்ததெனலாம்.
ராஜபக்ஷ பான் கீ மூன் கூட்டறிக்கையின் அடிப்படையில் கடினமான பிரேரணையாக அமெரிக்கா ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்தது. அதனை ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்த்தது. பின்னர் சிறிது சிறிதாக அதன் கனதி குறைக்கப்பட்டு கடந்த கூட்டத்தொடரில் அப்பிரேரணையில் அடங்கிய விடயங்களை நிறைவேற்ற இலங்கையின் மைத்திரிரணில் அரசாங்கம் அனுசரணை வழங்க முன்வந்தது.
சர்வதேச நெருக்கடிகளுக்குள் மாட்டிக் கொள்வதை தவிர்க்கும் வகையிலேயே மைத்திரிரணில் அரசாங்கம் ஐ.நா.பிரேரணையுடன் இணங்கிப் போனது. அந்த இணக்கத்திற்கு அமெரிக்கா பல வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி புரிந்துள்ளது. அதாவது அப்பிரேரணையின் கடுமையான அம்சங்கள் நீக்கப்படுவதற்கு இலங்கை, அமெரிக்காவை நாடியிருந்தது. அதனை ஏற்றுக் கொண்டே அமெரிக்கா செயற்பட்டது.
ஐ.நா.எமக்குரியதல்ல. அது அமெரிக்காவிற்குரியது என்று இந்திய உயர்நீதிமன்ற நீதியரசர் காலஞ்சென்ற கிருஷ்ண ஐயர் (க்N டிண் ணணிt ஞூணிணூ தண் ஆதt ஞூணிணூ த.ண்) கூறியிருந்தார். அக்கூற்று இன்றும் மெய்ப்படும் வகையில் அமெரிக்கா ஐ.நா. மீது செல்வாக்கு செலுத்துவதாக இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து உறுப்பு நாடுகளின் ரத்து செய்யும் அதிகாரத்தினால் ஒரு புறம் சமநிலை பேணப்பட்டாலும், மறுபுறம் நீதி நியாயங்கள் நிலை நாட்டப்படுவதற்கு அவ்வதிகாரம் தடையாக இருக்கிறது. அதாவது ஏதாவது தீர்மானத்தை ஒரு நாட்டிற்கு எதிராக எடுக்கப்படும் போது எவ்வித காரணமுமின்றி அந்த ஐந்து நாடுகளில் ஒன்று அத்தீர்மானத்தை எதிர்த்தால் அத்தீர்மானம் இரத்தாகி விடும்.
பாதுகாப்பு சபை இரத்து செய்யும் அதிகாரத்தை பாவிப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட வன்முறை கிடையாது. அதனால் அத்தீர்மானத்தை ரத்து செய்ய முற்படும் பாதுகாப்பு சபை உறுப்புரிமை கொண்ட நாடு. அதன் அரசியல் இருப்பு சர்வதேச ஆதிக்கம். தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கும் எதிர்க்கும் நாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகள், தீர்மானத்தினால் பாதிக்கபடவுள்ள நாட்டுடனான உறவும் தொடர்பும் என்ற பாரபட்சமான நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டே முடிவை எடுக்கும். அத்தீர்மானத்தின் நியாயம், நீதி பற்றி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
இதேபோன்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானங்களை எடுக்கும் போது அதன் உறுப்பு நாடுகள் தீர்மானத்தின் நியாயப்பாட்டை விட அத்தீர்மானத்தை கொண்டு வரும் நாடு, அத்தீர்மானத்தால் பாதிக்கப்படும் நாடு, அவ்வாறான தீர்மானங்கள் தமக்கு எதிராகவும் கொண்டு வரப்படலாம் என்ற பயம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே தீர்மானத்தை எடுக்கின்றன. இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தபோதும் கூட இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் எல்லாமே இலங்கையில் நடைபெற்ற அநியாயங்களை அங்கிகரித்தவையோ, ராஜபக்ஷ அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டவையோ அல்ல. மாறாக அப்பிரேரணை அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டது என்பதாலும், அம்மாதிரியான தீர்மானங்கள் தமக்கு எதிராக கொண்டு வரப்படலாம் என்ற பயத்தாலும் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்தன.
இலங்கையை ஆதரித்த கியூபா இன்று அமெரிக்காவுடன் நெருக்கமாக உறவாடுகிறது. தெரிந்ததே. எனவே ஐ.நா. சபையோ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையோ அல்லது அதன் ஏதாவதொரு முகவர் அமைப்போ உலக சமாதானம், நீதி, நேர்மையின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகமுடியாதிருக்கின்றன. அதேவேளை அதனால் கொண்டு வரப்படும் எல்லா பிரேரணைகளும் பாரபட்சமற்ற நீதி நேர்மையின் அடிப்படையிலானவையுமல்ல.
முதலாம் உலகப் போரின் முடிவில் அமைக்கப்பட்ட தேசங்களின் கூட்டவையோ இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமைக்கப்பட்ட ஐ.நா.சபையோ எல்லா நாடுகளுக்கும் உண்மையான சமாதானம், சமத்துவம், நீதி, நியாயம் போன்றவற்றை நிலைநாட்டுவதை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை அல்ல. அழிவுக்குட்பட்ட பெரிய வலிய நாடுகள் மீளெழும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டவையே. ஆனால் ஐ.நா. உலக சமாதானம், உலக அபிவிருத்திக்கு எந்த பங்கும் ஆற்றவில்லை என்றோ, அழிவுகளையே ஏற்படுத்தியது என்றோ கூற முடியாது. குறைபாடுகள், விமர்சனங்கள், இயலாமை போன்றன இருந்தாலும் ஐ.நா.வின் செயற்பாடுகளும் இல்லாத உலகத்தையும் நாடுகளையும் எண்ணிப்பார்த்து மதிப்பிட்டால் எவ்வளவு அழிவு நிறைந்ததாக இருந்திருக்கும் என்பது புலப்படும்.
ஐ.நா தலையிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளன என்று சொல்லமுடியாவிட்டாலும், பல பிரச்சினைகளின் தாற்பரியம் குறைக்கப்பட்டுள்ளன. அல்லது ஒரு முரண்பாடு பாதிப்பு குறைவான இன்னொரு முரண்பாடாக மாற்றப்பட்டுள்ளது. அதேவேளை ஐ.நா. தலையீட்டின் பின்னரும் உக்கிரமடைந்த பிரச்சினைகளும் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன. பாலஸ்தீன பிரச்சினை தீர்க்கப்படாமலே இருக்கின்றது.
நிலவுகின்ற உலக ஒழுங்கில் ஆதிக்க சக்திகளினது ஆதிக்கத்திற்குட்பட்டதாக ஐ.நா.சபையும், அதன் முகவர் அமைப்புகளும் இருந்தபோதும், உலக சமாதானம், நாடுகளுக்கிடையேயான பிணக்குகளுக்கான தீர்வு, மனித உரிமைகள், பொருளாதார அபிவிருத்தி போன்றவை தொடர்பாக கவனஞ்செலுத்த தவறவில்லை. ஏற்றத்தாழ்வுள்ள இன்றைய நவகாலனித்துவ நவதாராளவாத ஏகாதிபத்திய ஆதிக்க ஒழுங்கிற்குட்பட்டு ஐ.நா. அதன் கடமைகளையும், பொறுப்புகளையும் செய்துவருகிறது.
இந்த பின்புலத்திலேயே இலங்கை பிரச்சினையில் ஐ.நா.சபையினது இயலாமை பற்றி கவனிக்க வேண்டியவர்களாகிறோம். உள்நாட்டு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காத வேளையில், இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ உலக அதியுயர் அமைப்பான ஐ.நா. சபையின் உயர் அதிகாரியான பொதுச்செயலாளர் நாயகத்துடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை முக்கியத்துவம் பெற்றது. அதனுடைய தாக்கம் குறைவாக இருக்கின்றபோதும் இன்று அரசாங்கம் மெத்தென போக்கிலேனும் எடுத்துவரும் மீள் குடியேற்ற, புனர்வாழ்வு, புனரமைப்பு நல்லிணக்க நடவடிக்கைகள அக்கூட்டறிக்கையையும் அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தையும் அடிப்படையாக கொண்டவையே.
அதனால் இரண்டு பதவிகால முடிவில் இங்கு வரும் பான் கீ மூனின் விஜயத்தின்போது தமிழ் மக்கள் தரப்பில் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்களும், கொடுக்கப்பட வேண்டிய அழுத்தங்களும் பற்றி கவனிக்கப்பட வேண்டும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏகபோக அமைப்பென்று எண்ணிக்கொண்டு அவரை சந்தித்து எமது பிரச்சினைகளை விரிவாக பேசினோம் என்று அதன் தலைவர்கள் அறிக்கை விடுவதுடன், தாங்களும் திருப்திப்பட்டுச் கொண்ட தமிழ் மக்களையும் திருப்தியடைய வைக்க முற்படுவதை தவிர்த்து, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஐ.நா.பொறிமுறையையே நம்புவதோ, நம்புவதாக காட்டுவதோ, மக்களை நம்ப வைப்பதோ ஆரோக்கியமானதல்ல. ஆனால்
ஐ.நா.பொறிமுறையினூடாக எடுக்கப்பட வேண்டிய, நடவடிக்கைகள் இருக்கின்றன. அவற்றை தெளிவாக வரையறுத்துக் கொண்டு பான் கீ மூனை சந்திக்கும் போது கலந்துரையாடுவதுடன், அவரது வருகையின் போது வெகுஜன கவன ஈர்ப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதும் அவசியம்.
த.தே.கூட்டமைப்பு மைத்திரிரணில் அரசாங்கத்தை அசௌகரியகப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் பான் கீ மூனை சந்திக்கும் போது அடக்கி வாசிக்கும் நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. அத்துடன், கவனயீர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தவறக்கூடாது. ஏனைய அமைப்புகளும், மக்களும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முற்பட்டால் தடையாக இருக்கக்கூடாது.
எதிர்வரும் மாதம் தமிழ் மக்கள் பேரவையும் த.தே.கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய அமைப்புகளும் முன்னெடுக்கவிருக்கும் வெகுஜன போராட்டங்களும், நடவடிக்கைகளும் சட்டவிரோதமானதும் அரசியலமைப்பிற்கு விரோதமானதும் என்றும் தமிழரசு கட்சித் தலைவர்கள் அண்மையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டுக்குழுக் கூட்டத்தில் விமர்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவ்வெகுஜன போராட்டங்களில் மக்கள் கலந்துகொள்ளக்கூடாதென த.தே.கூட்டமைப்பு அறிக்கை விட வேண்டும் என்ற முன்மொழிவையும் தமிழரசு கட்சித் தலைவர்கள் வைத்துள்ளனர். அதனை த.தே. கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் நிராகரித்ததால் அவ்வறிக்கை விடும் விவகாரம் கைவிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை சில வேளைகளில் தமிழரசுக் கட்சியின் பெயரில் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழ் மக்களின் வாக்குகளை த.தே.கூட்டமைப்போ தமிழரசு கட்சியோ பெற்றிருக்கலாம். தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கை ஜனநாயக உரிமைகள், அரசியல் என்பன பாராளுமன்ற வாக்கு அரசியலுக்கு வெளியேயே விரிந்தும் பரந்தும் இருக்கிறது. எனவே தமிழரசு கட்சியினர் தமிழ் மக்களின் ஜனநாயக செயற்பாடுகளை மறுத்து அரசியலை தங்களுக்குள் மட்டும் முடக்க முடியாது. இது தமிழீழப்புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் போராட்டங்களை அதன் ஆயுதப் போராட்டத்திற்குள்ளும், அதன் தலைமையிலான நடவடிக்கைகளுக்குள்ளும் முடக்கியதற்கு ஒப்பானதாகும். அத்தவறுகளை மீளவும் செய்வதால் அழிவே மிஞ்சும்.
பான் கீ மூன் வருகையின் பின்னால் பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றில் மக்கள் சார் நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments