Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திராய்மடுவில் மட்டு. மாவட்டச் செயலக நிர்மாண வேலை இம்மாதம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டத்துக்கான முதல் கட்டட வேலைகள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் 250 மில்லியன் செலவில் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் மாநகர சபை, பிரதேச செயலாளர், கட்டங்கள் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2014ஆம் ஆண்டு புதிய மாவட்ட செயலகக் கட்டத் தொகுதி ஆரம்பிப்பது தொடர்பான முன்மொழிவுகள் தேசியத் திட்டமிடல் செயலகத்திற்கும், தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களதிற்கும் அரசாங்க அதிபர் ஊடாக முன்வைக்கப்பட்டன.
அதனடிப்படையில் ரூபா 1000 மில்லியனுக்காக எதிர்பார்க்கப்பட்ட நிதி ஏற்பாட்டிற்கு இத்திட்டம் வரையப்பட்டிருந்தது.
தேசிய திட்டமிடல் செயலகத்தின் சிபார்சுடன் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு 2015- 16ஆம் ஆண்டுகளில் பெறுகை நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது நிர்மாண வேலைகளுக்கான ஒப்பந்தம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் லிங் எஞ்ஜினியரிங் பிரைவேட் நிறுவனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரண்டு வருட காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் வகையில் வேலைகள் 2016 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
புதிய கட்டத் தொகுதியின் மூலம் தற்போது நகரத்தின் பல பகுதிகளிலும் வேறு வேறாக இயங்கிவரும் திணைக்களங்கள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் பொது மக்கள் ஒரே கூரையின் கீழ் சகல சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டத்தின் வடிவமைப்பினை கட்டடங்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
தற்போது மாவட்ட செயலகம் இயங்கி வருகின்ற ஒல்லாந்து கோட்டை கட்டடத் தொகுதியானது தேசிய தொல்பொருள்கள் திணைக்கத்திற்குச் சொந்தமானதாக இருப்பதாலும் திணைக்களங்களுக்கான இடநெருக்கடி காரணமாகவும் புதிய கட்டடத் தொகுதிக்கான தேவை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2013 களிலேயே இந்த இட நெருக்கடி நிலை உருவாகியிருந்த போதும் 2014ல் இதற்கான அனுமதிகளைப் பெறுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு முதல் கட்டமாக 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நகர அபிவிருத்தி அதிகார சபையின் புதிய நகரத்திட்டமிடலில் மாவட்ட செயலகத்துக்கான கட்டத் தொகுதி திராய்மடு பிரதேசத்திலேயே குறித்துக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது மாவட்ட செயலகம் இயங்கிவரும் ஒல்லாந்து கோட்டையானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புனரமைப்புச் செய்யப்பட்டு நூதன சாலையாக பேணப்படுவதற்கும், திட்டமிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகருக்கு வருகை தரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் டச் கோட்டையினைச் சுற்றிப் பார்வையிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் ஒல்லாந்துக் கோட்டையானது ஏற்கனவே இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது மரம், செடி, கொடிகளால் கிடந்த கோட்டையின் மேல்தளம், அகழி, சுற்றுவட்டாரங்கள் அழகுபடுத்தப்பட்டும் புனரமைக்கப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments