5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நாடெங்கிலும் 2959 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சையில் 350,701 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் பரீட்சைக் கடமைகளில் 28,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன் பகுதி ஒன்று பரீட்சை காலை 9.30 மணி முதல் 10.15 மணிவரையும் , பகுதி இரண்டு பரீட்சை 10.45 முதல் 12.00 மணி வரையும் நடைபெறவுள்ளது. இதன்படி பரீட்சை ஆரம்பமாவதற்கு அரை மணித்தியலாத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு தமது பிள்ளைகளை அழைத்துச் செல்லுமாறு பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெற்றோர்களை பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை வினாத்தாளில் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி முறையாக விடையளிக்குமாறும் விடையளிக்க பென்சில் மற்றும் பேனையை பயன்படுத்த முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் பரீட்சார்த்திகளை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் பெற்றோர்களுக்கு எக்காரணம் கொண்டும் பரீட்சை மண்டப பகுதிக்குள் செல்ல அனுமதியளிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு யாரேனும் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டால் அவர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 Comments