Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரவி மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் அரசைத் தோற்கடிக்க பொது எதிரணி வியூகம்

நிதி  அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், அதன்போது அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை வகுத்துச் செயற்படுவதற்கு பொது எதிரணி முற்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி சார்பில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இரண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை திங்கட்கிழமை முக்கிய கூட்டமொன்றை அவசரமாக ஏற்பாடு செய்துள்ளன. பொது எதிரணி கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும், அதனைத் தோற்கடிப்பதற்குக் கையாளவேண்டிய உபாயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படலாம் எனத் தெரிகின்றது.
இப்பிரேரணையை கொண்டுவந்திருக்கும் பொது எதிரணி இரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஒன்று நாளை மறுதினம் 7ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர் தினேஸ் குணவர்தனவின் தலைமையிலும், மற்றையது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் எதிர் வரும் 8ஆம் திகதி காலை 11 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திலும் நடைபெறவுள்ளது என டி.எம்.ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி ஆகியவற்றை தம்மோடு இணைத்துக் கொள்வது தொடர்பில் அக்கட்சிகளோடு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர் நாளை மறுதினம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 34 எம்.பி.க்களின் கையெழுத்துக்களோடு சபாநாயகரிடம் மார்ச் 24 ஆம் திகதி கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை  புதன்கிழமை விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவே காரணம் என இவர்கள் தமது நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதேவேளை, குறிப்பிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரரணை தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பதென்பதையிட்டு ஜே.வி.பி. இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments