மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது மாவட்ட அரசாங்க அதிபர் பொலிசில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டுவரும் லங்காசிறி மற்றும் தமிழ்த்தந்தி பத்திரிகையின் கட்டுரை எழுத்தாளரும் விசேட செய்தியாளருமான தீரன் என்றழைக்கப்படும் செல்வக்குமார் நிலாந்தன்(33) என்பவர் மீதே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சாள்ஸ் சரோஜாதேவி அவர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அரசாங்க அதிபரின் முறைப்பாடு குறித்து விசாரணை செய்வதற்காக சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரை நாளை பிற்பகல் 3.00 மணிக்கு மட்டக்களப்பு நகர பொலிஸ் நிலையத்திற்கு வருகைதருமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச செயலாளர்களின் முறையற்ற இடமாற்றங்கள் குறித்தும் மாவட்ட அரசாங்க அதிபரின் பொறுப்புக்கூறும் தன்மையினை சுட்டிக்காட்டி ஊடகங்களில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றிற்கு எதிராகவே குறித்த ஊடகவியலாளர் மீது மட்டக்களப்பு பொலீஸ் நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இக்காலகட்டத்தில் ஜனநாயக ரீதியான மக்கள் பிரச்சினைகள் குறித்து ஊடகத்தின் ஊடாக கேள்வி எழுப்பிய கட்டுரை ஒன்றிற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ஒருவர் பொலீஸ் நிலையத்தின் ஊடாக பதில் வழங்கியுள்ள முறைமையானது மட்டக்களப்பில் தொடர்ந்தும் மகிந்தராஜபக்சவின் அடக்குமுறை நிர்வாகம் நடைபெற்றுவருவதையே காட்டுவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
0 Comments