மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதூர் வீச்சுக்கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய யுவதி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீச்சுக்கல்முனை பிரதான வீதியைச் சேர்ந்த விமலநாதன் விநோதினி (வயது 24) என்பவரே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவராவார்.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த யுவதி வீட்டிலிருந்து பொருட்கள் வாங்குவதற்காக கடைத் தெருவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, உன்னிச்சைக் குளத்திற்கு நீராடச் சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் அவர் மீது மோதியுள்ளது. மோதுண்ட யுவதி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் நெடுக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த யுவதி உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உட்காயங்கள் காரணமாக பின்னர் அவர் அங்கிருந்து அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சையளிக்கப்படடு வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்ததாகத் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்து தொடர்பில் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, விபத்தில் சிக்கி மரணித்த யுவதிக்கு மே 17 ஆம் திகதி திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 19 வருடங்களாக தனது 3 பெண் பிள்ளைகளின்; நல்வாழ்வுக்காக வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த தந்தை, மூத்த மகளின் திருமணத்திற்காக நாடு திரும்பிய அன்றைய தினமே மகள் விபத்தில் சிக்கிய நிலையில் மரணமடைந்த செய்தி ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 Comments