இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கான உடன்படிக்கை விரைவில் நிறைவு செய்யப்பட உள்ளதாக இந்திய மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் இந்த விடயத்தை கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திட்டம் குறித்து தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், இதுவரையில் திட்டம் பூரணப்படுத்தா்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் அமைக்கும் திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியும் பரிந்துறைகளை முன்வைத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இந்திய மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் நிர்மானிக்க எதிர்பார்த்துள்ள இந்த பாலத்திற்கான பூரன நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராகவுள்ளதாகவும் இந்திய மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைக்க முயற்சித்து வருவதாக இந்திய மத்திய கனரக மற்றும் பொதுத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.
இராமநாதபுரத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இணை அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments