சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு
உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை
அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
எவ்வாறாயினும் நாளை மறுதினம் முதல்
மழையுடன் கூடிய கால நிலை சில பிரதேசங்களில் நிலவுவதற்கான வாய்ப்புள்ள
போதும் அதனால் வெப்ப நிலையில் குறைவு ஏற்பட வாய்ப்பில்லையெனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் வரையில் இதே கடும்
வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து
தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் கடந்த காலங்களுடன்
ஒப்பிடுகையில் இம்முறை அதிகூடிய வெப்பநிலை நிலவுகின்றது. வெப்பநிலை
அதிகரிப்புடன் வைரஸ்களின் தாக்கமும் அதிகரித்திருப்பதனால் சிறுவர்கள்,
மற்றும் கர்ப்பிணிகள் விரைவில் நோய் தாக்கங்களுக்கு உள்ளாக நேரிடுமென்றும்
வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வீசும்
காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் இடைப்பருவப்பெயர்ச்சி
மழையில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியன காரணமாகவே நாட்டின் வெப்பநிலையில் திடீர்
அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரி
நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக
பொதுமக்களை அறிவுறுத்தும் பொருட்டு பல செயற்பாடுகளும்
மேற்கொள்ளப்படுகின்றன. அதிக வெப்பநிலைக் காரணமாக வழமையிலும் கூடுதலான நீர்
உடம்பிலிருந்து வெளியேறும் என்பதனால் சிறுவர்கள், கார்ப்பிணித்தாய்மார்
உள்ளிட்ட அனைவரும் அடிக்கடி நீர் அல்லது நீராகாரங்களை பருக வேண்டும்.
0 Comments