ஐந்து வருடத்தின் பின்னர் என் நிலை என்னவாக இருக்கும் என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர். ஐந்து வருடத்தின் பின்னர் நாடு என்ன நிலையில் இருக்கும் என்பதே எனக்கு முக்கியம். என்ன பிரச்சினை வந்தாலும் கடமையை செய்ய தயங்கேன் என் கடமையை நான் செய்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மைத்திரி ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தி விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவகனாக, ஒரு வருடத்தை பூர்த்தி செய்து உங்கள் முன் நிற்க கிடைத்துள்ள வாய்ப்பிற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதையே நான் கூறுவேன். என் மனக்கஷ்டங்கள், பிரச்சினைகள், அழுத்தங்கள் என்பவற்றிலிருந்து அன்றுதான் நான் வெளியேறினேன்.
இந்த ஒருவருட பூர்த்தியை கொண்டாடும் நேரத்தில் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றனர். சிலர் நாம் நிறைய காரியங்களை செய்துள்ளதாக கூறுகின்றனர். சிலர் நாம் என்ன செய்தோம் என்று கேள்வியெழுப்புகின்றனர். மேலும் சிலர் எதுவுமே செய்யவில்லையென்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நான் கூறுவது என்னவென்றால் உங்களுக்கு தெரியாத, விளங்காதவற்றையே நாம் செய்ய முயற்சிக்கிறோம் என்பதாகும்.
கடந்த ஆண்டு தேர்தல் ஆண்டு, ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஓகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் காலங்களில் பணிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.
பெரும்பாலான அரச நிறுவனங்களில் செயற்பாடுகள் தடைபடுகின்றன. தேர்தல் காலங்களில் அபிவிருத்திப்பணிகள் தடைபடுகின்றமை சாதாரண விடயமாகும். இந்த வருடம் நாம் உட்பிரவேசித்த காலமாகும். எதிர்வரும் காலப்பகுதியில் என் தாய்நாட்டின் அபிவிருத்திக்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். என தெரிவித்துள்ளார்.
0 Comments