வடக்கு, கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்து வருவாதக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் 6 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசு தீர்மானித்துள்ள நிலையில், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது என்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்த பின்னரே எந்தெந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்பது தொடர்பாகத் தெளிவாகக் குறிப்பிட முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் அடுத்த வருடம் 6 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரம் ஏக்கர் காணிகள் என்று குறிப்பிடுவதைவிட பெருந்தொகையான காணிகள் விடுவிக்கப்படும் என்று குறிப்பிடலாம்.
இருப்பினும் அந்தக் காணிகள் எவை என இதுவரை இனங்காணப்படவில்லை. எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது என்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்துவருகின்றனர். விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எவை என்பதை அவர்கள் குறிப்பிட்ட பின்னரே அது தொடர்பாக தெளிவாகக் குறிப்பிட முடியும்.
இதேவேளை வடக்கு, கிழக்கில் 65,000 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குளங்களைப் புனரமைத்து, விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் ஜனவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
0 Comments